தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் மூலம் அவர்களின் சொத்து விவரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 404 கோடி ரூபாய் அசையும் சொத்துகளுடனும், 220 கோடி ரூபாய் அசையா சொத்துகளுடனும் முதலிடத்தில் மிரட்டுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர் 734 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 94 கோடி ரூபாய் சொத்துடனும், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடனும் உள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனக்கு 7.64 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனக்கு அசையா சொத்துக்கள் எதுவுமில்லை என்றும், 17 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாஜகவின் நயினார் நாகேந்திரன் 20 கோடி ரூபாயும், தமிழிசை சௌந்தரராஜன் 3.76 கோடி ரூபாயும் சொத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கு அசையா சொத்து ஏதுமில்லை என்றும், 5.11 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் இந்த சொத்து கணக்கு விவரங்கள் தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.