மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் பிப்ரவரி இறுதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அஜித்பவார் வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதோடு அஜித்பவாரின் தொகுதியான பாராமதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் சுனேத்ரா பவாரைப் போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி செய்தன.
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) தாங்கள் சுனேத்ரா பவாரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டது. சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேயை சுனேத்ரா பவார் போனில் தொடர்பு கொண்டு இத்தேர்தலில் தனக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அஜித்பவார் மகன் பார்த் பவார்
உத்தவ் தாக்கரேயும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியை சுனேத்ரா பவாரால் சரிக்கட்ட முடியவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆகாஷ் மோரே என்பவரை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. இது தவிர வேறு சில வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர். இத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அஜித்பவார் மகன் பார்த் பவார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தி தவறு செய்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் அதன் முடிவெடுக்கும் திறனைப் பிரதிபலிக்கிறது. இந்த முடிவு மாநிலத்தில் காங்கிரஸின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கும். நாங்கள் போட்டியிலிருந்து விலகும்படி கேட்டு யாருக்கும் எந்தத் தொலைபேசி அழைப்பையும் செய்யப் போவதில்லை'' என்று தெரிவிக்கிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளரைப் போட்டியில் இருந்து வாபஸ் பெறச்செய்ய டெல்லி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.
சுனேத்ரா பவார் வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகு அளித்த பேட்டியில், "இதுபோன்று இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டிய ஒரு நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. பாராமதி மக்களுக்குச் சேவை செய்ய அஜித் தாதாவின் பாரம்பர்யத்தைத் தொடர எனது தனிப்பட்ட இழப்பைச் சமாளிக்க முயற்சித்தேன்'' என்று தெரிவித்தார்.
அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?