தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் எதிர்கட்சிகளுக்கு பல்டி அடிக்கும் நிகழ்வானது அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் தேமுதிகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த மீசை ராஜேந்திரன் திடீரென தேமுதிகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீசை ராஜேந்திரன் கட்சியின் மாநாடுகள், ரத யாத்திரைகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளார். சமீபத்தில் அவரது மகள் திருமணத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்திய நிகழ்ச்சியும், அதில் மீசை ராஜேந்திரன் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்ற காட்சியும் பெரும் பேசுபொருளானது.
இந்த நிலையில் தான் மீசை ராஜேந்திரன் வெளியிட்டுள்ள கடிதத்தில், நான் கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டு காலமும் தாங்கள் இயக்கத்தில் 21 வருடமும் பல்வேறு பதவி வகித்து பயணம் பண்ணினேன். 3 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்றேன். தாங்கள் இயக்கத்திற்காக கடுமையாக உழைத்தேன். என் மேல் கட்சிக்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கேப்டன் என்கின்ற ஒற்றை சொல்லுக்காக நான் ஏற்றுக்கொண்டேன். நான் வகித்த செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை விடுவிக்கும்படியும் மற்றும் கட்சியிலிருந்தும் விடுவிக்கும்படியும் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியதற்கு அவரது ஆதரவாளர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகிறார்கள். முதல் காரணமாக கட்சியில் விசுவாசத்திற்கு மதிப்பு இல்லையெனவும், தேமுதிக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 10 வேட்பாளர்களில் 7 பேர் நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவும் 3 பேர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் தனக்கு நெல்லையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தாகவும் ஆனால் தன்னை அங்கீகரிக்காத காரணத்தால் தேமுதிகவில் இருந்து விலகும் முடிவு மீசை ராஜேந்திரன் எடுத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் தேமுதிக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மீசை ராஜேந்திரனின் பெயர் இடம்பெறவில்லையெனவும் கூறப்படுகிறது.