பிருந்தாவனப் பகுதியில் சிறுமி ஒருவர் கதறி அழுது சாமியார் மீது பாலியல் புகார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது 17 வயது சிறுமி ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு, “இந்தச் சாமியார் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்” என்று கதறி அழுதார். அவரது தாய் அவரைச் சமாதானப்படுத்த முயல, பொதுமக்கள் திகைத்து நின்றனர். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மதுரா காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியது.
மதுராவின் ஜெயந்த் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லலிதா ஆசிரமம் அருகே காய்கறி கடை நடத்தி வரும் பிரகாஷ் சந்திர பெஹ்ரா என்ற சாமியார் மீது அந்தச் சிறுமி புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CO) பிரீதம் பால் சிங், சாமியார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
View this post on Instagram
A post shared by Republic Bharat (@republicbharat)
பாதிக்கப்பட்ட சிறுமி ஹரியானா மாநிலம் பல்வலில் உள்ள ஒரு குருகுலத்தில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். விடுமுறை நாட்களில் மதுராவிற்கு வந்து செல்வது வழக்கம். இவரது தாய் மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர். கணவரைப் பிரிந்த நிலையில், மகளுடன் மதுராவிற்கு வந்து குடியேறியுள்ளார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் சந்திரா, தனது வீட்டைச் சிறுமியின் தாய்க்குத் தானமாக வழங்கியுள்ளார். இருவரும் அந்த வீட்டில் ‘லிவிங் இன்’ (Live-in) உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டைப் புதுப்பிக்க சிறுமியின் தாய் வங்கியில் ₹15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ₹5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்திய நிலையில், மீதமுள்ள ₹10 லட்சத்தை அடைக்குமாறு சாமியாரை அவர் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தப் பணப் பிரச்சனை காரணமாகப் பாலியல் புகார் அளிக்கப்பட்டதா அல்லது உண்மையில் சிறுமி பாதிக்கப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் பிரகாஷ் சந்திரா கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். மேலும் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கின் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.