இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசி கடற்கரையில் ஜாலியாகப் பொழுதுபோக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குக் காத்திருந்தது ஒரு மரண பயம் கலந்த விபத்து. அங்குள்ள கடற்கரை ஓரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ‘டோனட் போட்’ எனப்படும் வட்ட வடிவக் காற்றடைத்த படகு, இழுத்துச் செல்லப்பட்ட ஸ்பீட் போட்டின் அபரிமிதமான வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்தது.
கடற்கரை மணற்பரப்பிற்கு மிக அருகே அதிவேகமாக வந்த அந்தப் படகு, எதிர்பாராத விதமாக மணலில் மோதி தலைகீழாகப் புரண்டது. இந்த பயங்கர வேகத்தில் படகில் இருந்த 5 சுற்றுலாப் பயணிகளும் பந்து போல காற்றில் தூக்கி வீசப்பட்டு, மணலில் பயங்கரமாக விழுந்தனர். உயிர் காக்கும் கவசங்களை அணிந்திருந்த போதிலும், அவர்கள் மணலில் மோதிய வேகத்தில் பலத்த காயமடைந்தனர்.
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் மக்கள் மீது இவர்கள் விழுந்ததால் அங்கு பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. ஒரு சிறு கவனக்குறைவு எப்படிப் பேராபத்தாக முடியும் என்பதற்குச் சாட்சியாக அமைந்த இந்த விபத்தின் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.