1,200 சிலிண்டர்களை கறுப்புச்சந்தையில் விற்ற எல்பிஜி ஊழியர்? உண்மை வெளிவந்ததும் தற்கொலை முயற்சி..!
Webdunia Tamil April 09, 2026 06:48 PM

மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள துல்ஜாபூர் தாலுகாவில், ஹெச்பி எரிவாயு விநியோகஸ்தர் ஒருவர் நேரலை வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தின் போதே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டி சவர்கான் கிராமத்தை சேர்ந்த ஞானேஸ்வர் மாலி என்ற அந்த விநியோகஸ்தர், நிறுவன அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தின் போது இந்த விபரீத முடிவை எடுத்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் தற்போது சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சிலிண்டர் கிடைக்காத வாடிக்கையாளர்கள் மாலியை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கியதே அவரது இந்த முடிவுக்கு காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக தமல்வாடி போலீஸார் கேஸ் ஏஜென்சியிடம் தணிக்கை மேற்கொண்ட போது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.

நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சிலிண்டர்களுக்கும், விநியோகம் செய்யப்பட்ட சிலிண்டர்களுக்கும் இடையே பெரும் முரண்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,200 சிலிண்டர்களை மாலி கறுப்புச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சிலிண்டர் தட்டுப்பாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.