நிலம் கையகப்படுத்துதல்: 18,435.84 ஏக்கர்கள் நிலம்; 4,146 வீடுகள் | அணை ஓசை 13
Vikatan April 09, 2026 04:48 PM
மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சி

மேட்டூர் அணை கட்டுமானம் குறித்த வரலாற்று நிகழ்வுகளில், இத்தொடரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான விவசாய மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் அவர்களின் துயரங்கள் குறித்த பார்வைகளை நாம் இந்த சமயத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். சில பதிவுகள் இது குறித்து அறிந்து கொண்ட பின் மீண்டும் கட்டுமானம் குறித்த தகவல்களுக்கு திரும்ப வருவோம்.

நிலம் கையகப்படுத்தும் வேலை

1925 ஆம் ஆண்டு "ஹெட் ஒர்க்ஸ்" எனப்படும் முக்கிய அணை கட்டுமான பிரிவு முகாம்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், ஸ்டோர் கொட்டகைகள், பட்டறைகள், கூலிகளின் குடிசைகள், மருத்துவமனை, தபால் நிலையம் போன்றவற்றுக்கு நிலங்களை கையகப்படுத்துதல் மேலும் அதனுடன் நீர் தேக்கம், பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் இவற்றுக்கும் நிலம் கையகப்படுத்தும் வேலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது முக்கிய நிகழ்வுகளாகும். இந்த நிலங்களில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள் என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய அணைக்கட்டு பகுதியில் கையகப்படுத்துவதற்கான நிலங்கள் இரண்டு மாவட்டங்களில் விரிவடைந்திருந்தது. அதாவது காவிரி ஆற்றின் இருபுறமும் உள்ள சேலம் மற்றும் கோவையின் பகுதிகள் வடக்கே காவேரிபுரம் மற்றும் நாகமரை கிராமங்களில் இருந்து தெற்கே நெரிஞ்சிப்பேட்டை வரை நீண்டிருந்தது.

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மேட்டூர் வரை சாலையை அகலப்படுத்தவும், மேலும் நேராக்கவும் நிலம் கையகப்படுத்தும் பணியும் நடந்தது. ஆரம்பத்தில், சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட சுமார் 7109 ஏக்கரும், கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லையில் சுமார் 11,462 ஏக்கரும் கையகப்படுத்துவதற்கு மதிப்பிடப்பட்டது.

கையகப்படுத்திய மொத்த பரப்பளவு 18,435.84 ஏக்கர்கள்கடின இலக்கு

G.O எண் 196 - I, 02.05.1925 -ல் மேட்டூருக்கு அருகில் அமைந்திருந்த நவப்பட்டி மற்றும் சாம்பள்ளி கிராமங்களில் அவசரமாகத் தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்துவதற்கு, மூன்று மாத காலத்திற்கு தேவையான பணியாளர்களுடன் ஒரு துணை ஆட்சியரை மெட்ராஸ் அரசின் தலைமைச் செயலகம் நியமித்தது.

தொடர்ந்து ஏழு துணை ஆட்சியர்கள் கள மற்றும் அலுவலக வசதிகளுடன் ஓராண்டுக்கு G.O No. 365 -I, தேதி 30.07.1925 என்ற அரசாணை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே நியமித்த துணை ஆட்சியர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டார்.

இந்த சிறப்பு துணை ஆட்சியர் பதவிக்காலம் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு சிறப்பு துணை ஆட்சியருக்கும் குறைந்தது ஒரு வருடத்தில், 2000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இது ஒரு இமாலய இலக்கு என்பதே உண்மை! தனி நபர் அறிவிப்பு சேவை தொடர்பான சட்டபூர்வ கட்டுப்பாடுகள் மற்றும் பல காரணங்களால் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவது கடினமான பணியாக இருந்தது. எனினும், நிலம் மற்றும் வீடு ஆகியவற்றின் இலக்குகள் அடையப்பட்டன.

எல்லைகளில் மிகச் சில இடங்களைத் தவிர பெரும்பாலான நிலங்களை கையகப்படுத்தும் பணி 1930 -ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நிறைவுக்கு வந்தது. இதன் மூலம் அப்போது கையகப்படுத்திய மொத்த பரப்பளவு 18,435.84 ஏக்கர்கள் நிலம் மற்றும் 4,146 வீடுகள். மிக பிரம்மாண்டமான பணி செவ்வனே செய்து முடிக்கப்பட்டது.

இழப்பீடு அளித்த விவரங்கள்

நில இழப்பீடு – ரூ 27,67,886/-. நில கையகப்படுத்திய அலுவலக செலவுகள் - 1,98,418/- (அலுவலர்களின் பென்ஷன் உட்பட) .

ஆக மொத்தம் ரூபாய் 29,66,684 ஆகும்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு சராசரியாக ரூபாய் 150/- இழப்பீடானது. இது இன்றைய மதிப்போடு ஒப்பு நோக்க இயலாது எனினும் மிகவும் குறைந்த செலவாயிற்று என்பதை உணர முடியும். உபரி நீர் வெளியேற்றப்பட்டு அது ஆற்றுடன் கலக்கும் சந்திப்புக்கு அருகில் உள்ள உபரி பாதைக்கு இடமளிக்க கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் 1934 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மற்றும் வேறு சில மாற்றங்களின் தேவைக்கும் சேர்த்து நிலம் கையகப்படுத்த அணை தலைமைப் பணிக்கு மட்டும் ஆன மொத்த செலவு 30,28,000/-.மட்டுமே!

கால்வாய் பணிகளுக்காக நிலம்

கால்வாய் பணிகளுக்காக கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களில் சுமார் 727 மைல் நீளத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டி இருந்தது. ஏழு சிறப்பு துணை ஆட்சியர்கள் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டனர். தேவைக்கேற்ப அவர்களது பணிக்காலமும் நீட்டிக்கப்பட்டது.

அணை ஓசை 13

1925- ல் இந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சிறப்பு துணை ஆட்சியர், ஒரு வருடத்தில் கால்வாய் பணிகளுக்கு 20 மைல் நீளத்துக்கு நிலம் கையகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கிளைக் கால்வாய்களும் சேர்ந்து கொள்ள ஒரு ஆண்டுக்கு 60 மைல் நிலம் கையகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 860 மைல் நீளமுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மொத்த செலவு 25,49,400/- ஆனது.

சிறப்பு கட்டுப்பாட்டு அதிகாரி:- (Special Controlling Officer).

1925- ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஒரு துணை ஆட்சியரை அரசு நியமித்தது. அவருக்கு மாத சம்பளம் ரூ.1,100/-. தேவையான அதிகாரிகளைக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இப்பணி மேற்கொள்ள வேண்டும். பிறகு, கையகப்படுத்தும் பணி ஆரம்பித்தபோது அரசு ஒரு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்தது. அவர் கலெக்டர் ரேங்கில் மேட்டூர் அணைக்கட்டு தலைமைப் பணி மற்றும் கால்வாய்கள் அமைக்கும் பணி இரண்டுக்குமான நிலம் கையகப்படுத்துதல் குறித்த மேற்பார்வை செய்ய பணிக்கப்பட்டார்.

இந்த சிறப்பு அதிகாரி நேரடி வருவாய் வாரியத்தின் கீழ் பணியாற்றுவார். மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து தனியாக சுதந்திரமாக பணியாற்றும் படி பணிக்கப்பட்டார். (G.O. No. 163 Public தேதி 24.02.1927). பிறகு, இந்தத் திட்டத்திற்கு 01.07.1927 அன்று ஒரு ஆணையர் நியமிக்கப்பட்டார். அப்போது சிறப்பு அதிகாரி பதவி நீக்கப்பட்டது.

தொடர்ந்து திட்டத்தின் மீது முன்னறிவிப்பை திருத்தி அமைப்பதற்கு அரசாங்கம் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து ஆணையர் பதவியை ரத்து செய்தது. இவ்வளவு பெரிய திட்டத்திற்கு கலெக்டர் அந்தஸ்தில் தனியாக ஒருவர் தேவை என்று அரசு பரிசீலித்தது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 கிராமங்களையும், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 கிராமங்களையும் ஆக மொத்தம் 21 கிராமங்களை உள்ளடக்கிய தனி "மேட்டூர் மாவட்டம்" தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருவாய் மற்றும் மாஜிஸ்டிரேட் அதிகார வரம்பையும் ஹூசூர் கருவூலத்தையும் கொண்ட கலெக்டரின் பொறுப்பில் அமைக்கப்பட்டது.

"சிறப்பு வருவாய் அலுவலர்" என்ற பெயரிடப்பட்ட பதவியில் தலைமை பொறுப்பை அளித்து அவருக்கு கீழே நிலம் கையகப்படுத்தும், சிறப்பு துணை ஆட்சியர்களின் கட்டுப்பாடு போன்றவை இந்த சிறப்பு வருவாய் அலுவலரின் கீழே கொண்டுவரப்பட்டது.

நிலம் கையகப்படுத்திய வழிமுறைகள்:

தலைமைப் பணியிடம் (அணை கட்டுமானம்) இடத்தில் நிலம் கையகப்படுத்துதல், கால்வாய் பணிக்கு கையகப்படுத்துவதில் இருந்து வேறுபட்ட ஒரு பணியாகும். முந்தையது முழு வயல்களின் பெரிய தொகுதிகளை கொண்டிருந்தது. பிந்தையது வயல்களின் பகுதிகள் அல்லது சிறிய பகுதிகளின் உட்பிரிவுகளை கொண்ட நீண்ட மற்றும் குறுகிய நிலங்களை கொண்டது.

தலைமைப் பணிகள்:

ஒவ்வொரு கிராமத்திலும் தேவையான நில அளவை மற்றும் நிலத்தின் அளவை காட்டும் நிலங்களின் அட்டவணைகள் பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்டன. சேலம் மற்றும் கோயம்புத்தூர் கலெக்டர்கள் இந்த அட்டவணைகள் குறித்து பிரிவு 4(1)ன் கீழ் அறிவிப்பு ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.

கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள், கிராம வரைபடங்களில் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்ததால், வேலை ஓரளவுக்கு சுலபமாக இருந்தது என்றே கூற வேண்டும். மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவசரமாகத் தேவைப்படும் நிலங்கள் முதலில் கையகப்படுத்தப்பட்டன.

அணை ஓசை 13

நிலங்களை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யப்பட்டது. சிறப்பு துணை கலெக்டர்கள் ஒப்புதல் அளித்து இழப்பீடு வழங்கப்பட்டது. அவசரமாக தேவைப்படும் விஷயத்தில் மட்டும் அரசாங்கத்தின் அவசர விதிகள் பின்பற்றப்பட்டன.

ஆனால், பெரும்பாலான நிலங்களின் விகிதங்கள் (ஈட்டுத்தொகை) தேவைப்பட்டால் உயர்த்திக் கொடுத்து நீதிமன்றங்களுக்கு வழக்குகளாக செல்வது தவிர்க்கப்பட்டது. அப்படி சென்ற ஓரிரு வழக்குகள் சட்டத்தின் சாதாரண விதிகளின் கீழ் மட்டுமே கையாளப்பட்டது.

உரிமையில்லாத மத சேவை இனாம்களில் ஓரிரண்டு வழக்குகள் தவிர மற்ற அனைத்திலும் பண இழப்பீடு வழங்கப்பட்டது. சிலருக்கு மாற்று நிலமும் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட சில வனத்தொகுதிகள், நீர்த்தேக்க பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் வீடுகளை அப்புறப்படுத்தி அதை இழந்தவர்களுக்கு புதிய நிலங்கள் காடழித்து வேறு இடத்தில் நிலங்கள் அளிக்கப்பட்டன. அதுபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் வருவாய் கோட்ட அலுவலர் வசம் வழங்கப்பட்டது.

மேட்டூரில் நிலம் கையகப்படுத்தும் பணி ஓரளவு சுமூகமாக நடைபெற்றது எனலாம். ஆனால், தஞ்சாவூரில் கால்வாய்கள், துணை கால்வாய்கள், கிளை கால்வாய்கள் போன்ற இடங்களில் நிலம் கையகப்படுத்தும் வேலை மிகவும் சிரமங்களுக்கு இடையில் நடந்தது. அளப்பது, மதிப்பீடு செய்வது, அறிவிப்பு வெளியிடுவது, நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ள விவசாயிகளை ஒப்புக்கொள்ளச் செய்வது, வரைபடங்கள் தயாரிப்பு போன்ற பல எண்ணற்ற வேலைகள் வெகு நாட்களை எடுத்துக் கொண்டது.

சிமெண்ட் போக்குவரத்துக்காக ரயில் பாதை, டிராம்வே - எளிதில் நிஜமான கனவு! | அணை ஓசை 12 கையகப்படுத்தப்பட்ட நிலங்களை குத்தகைக்கு விடுதல்:

மேட்டூரில் முக்கிய அணைக்கட்டு பகுதியில் தேவையான நிலங்கள் ஒரு வருடம் முன்னதாகவே கையகப்படுத்தப்பட்டன. ஆனால், நிலங்கள் நீரில் மூழ்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு, வேறு இடங்களில் குடியேற விரும்பினர். எனவே, அந்தப் பகுதியில் பெரும்பாலான நிலங்களை கையகப்படுத்தும் போது அந்த விவசாயிகளுக்கு குறைந்த அளவு சிரமம் மட்டுமே இருக்கக் கூடிய வகையில் கையகப்படுத்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சிறப்பு துணை ஆட்சியர் அவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கையகப்படுத்தும் பணி தாமதமானது.

விவசாயிகளுக்கு உண்டான கஷ்டங்களை ஓரளவுக்கு குறைக்க மற்றும் வட்டி சுமையை குறைக்க நிலங்களை கையகப்படுத்தி இருந்தாலும், "உடனடியாக" திட்டத்திற்கு தேவைப்படாத நிலங்களை அதன் உரிமையாளரான விவசாயிக்கே குத்தகைக்கு விடப்பட்டன. வருடாந்திர குத்தகையாக, உரிமையாளருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் 4 விழுக்காடு குத்தகைத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

அணை ஓசை 13

இதற்காக சிறப்பு குத்தகைப் பத்திரங்கள் தயாரித்து எழுதப்பட்டன. நிலங்களை குத்தகைக்கு விடுவது மற்றும் வாடகை வசூலிப்பது போன்ற வேலைகள் ஆரம்பத்தில் கையகப்படுத்தும் துணை ஆட்சியர் வசமும் பின்னர், மேட்டூரில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்ட போது இந்தப் பணி, வருவாய் கோட்ட அதிகாரியிடமும் மாற்றப்பட்டது.

மேட்டூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சில காலத்திற்கு குத்தகை விட்டது போலவே கால்வாய் பணிகளுக்கு கையகப்படுத்திய நிலங்களையும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் முயற்சித்தனர். ஆனால், இங்கு நீண்ட அளவில், குறுகிய அகலத்தில் நில கையகப்படுத்துதல் என்பது கால்வாய்களுக்கு செய்ததால், விவசாயிகள் பெரிய அளவில் இதற்கு விருப்பம் காட்டவில்லை.

மேட்டூர் அணை அமைய இருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த பல்வேறு கிராமங்களில் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு சொந்த நிலங்களை விட்டு கண்ணீருடன் வெளியேறிய அம்மக்களை நாமும் பின் தொடர்வோம்!

பயணம் தொடரும்...

நன்னீர் சிறப்பு
பொருள்: மேற்கு திசை குடகிலிருந்து காவிரி தோன்றி எம்முடைய சோழநாட்டினை வளப்படுத்துகிறது.“..குடா அது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும், தன்புனற் படப்பை எம்மூர்..” – புறநானூறு
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.