TATA Punch.ev தொடர்ந்து முன்னணியில் இருப்பது எப்படி? - டாடா மோட்டர்ஸின் விவேக் ஶ்ரீவத்ஸ்வ்
Vikatan April 09, 2026 04:48 PM

டாடா மோட்டர்ஸின் டாடா பஞ்ச்.ev அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது டாடா பஞ்ச்.ev-இன் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமாகியுள்ளது.

மாதாந்திர கார் விற்பனை எண்ணிக்கையை குறிக்கும் டாப் 10 பட்டியலில் தொடர்ச்சியாக பல மாதங்கள் இடம்பெற்ற கார் டாடா பஞ்ச். இந்த டாடா பஞ்ச்-ஐ போலவே டாடா பஞ்ச்.ev-யும் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், டாடா பஞ்ச்.ev-இன் ஃபேஸ்லிஃப்டும் அறிமுகமாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் டாடா மோட்டர்ஸின் தலைமை கமர்ஷியல் அதிகாரி விவேக் ஶ்ரீவத்ஸுடன் இதுகுறித்துப் பேசினோம். அப்போது அவர் கூறியதன் சுருக்கம் இங்கே:

Tata Punch EV

“பஞ்ச் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த ஒரு கார். பெட்ரோல் வேரியன்ட்டாக இருந்தாலும் சரி, EV வேரியன்ட்டாக இருந்தாலும் சரி, அதன் விற்பனை அமோகமாக உள்ளது.

முதல் முறையாக மின்சார கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் தேர்வாக மட்டுமல்ல, முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் காராகவும் டாடா பஞ்ச்.ev இருக்கும்.

மின்சார கார் வாங்குவது குறித்து அவர்களுக்கு எந்தத் தயக்கமும் வரக்கூடாது என்ற நோக்கில், அவர்களின் சந்தேகங்களைக் களைந்திருக்கிறோம். ‘போகும்போது வழியிலேயே சார்ஜ் தீர்ந்துவிட்டால் கார் நடுவழியிலேயே நின்றுவிடுமா?’ என்ற பயம் தேவையில்லை.

ஏனெனில் இதில் நாங்கள் பொருத்தியிருப்பது 40 kWh பேட்டரி. ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டு, சாதாரணமாக சாலைகளில் ஓட்டினால் 335 முதல் 350 கிலோமீட்டர் வரை செல்லும்.

மின்சார கார்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் அடுத்த சந்தேகம்: சார்ஜிங் செய்ய ஆகும் நேரம். டாடா பஞ்ச்-ல் இருப்பது பிரிஸ்மாட்டிக் செல்கள். அதனால் இதை ஃபாஸ்ட் சார்ஜரில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 135 கி.மீ வரை செல்லலாம்.

அதேபோல் பேட்டரி நீடித்திருப்பதா என்பதும் ஒரு முக்கியமான சந்தேகம். நெக்சான், கர்வ் மற்றும் ஹாரியருக்கு தருவது போல டாடா பஞ்ச்.ev பேட்டரிக்கும் லைஃப்டைம் வாரண்டி வழங்குகிறோம்.

டாடா பஞ்ச்-ன் பேட்டரி மற்றும் சிங்கிள் சார்ஜில் அது செல்லக்கூடிய தூரம் இரண்டும் மேம்பட்டிருப்பதால், இனி ஊர் விட்டு ஊர் செல்லும், அதாவது 400–500 கிலோமீட்டர் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள்கூட டாடா பஞ்ச்.ev-யை தாராளமாகப் பயன்படுத்துவார்கள்.

காரணம்: ஆபீஸ், ஸ்கூல், ஷாப்பிங் என்று நகரத்திற்குள் தினமும் சென்று வர ஒரு கார்; வார இறுதிகளில் வெளியூர் சென்று வர இன்னொரு கார் என்று எல்லோரும் இரண்டு கார்கள் வாங்க மாட்டார்கள். வாடிக்கையாளர்களின் இந்த இரண்டு தேவைகளையும் எந்த ஒரு கார் பூர்த்தி செய்கிறதோ அதுவே வரவேற்பைப் பெறும்.

TATA Punch EV

இந்த கோணத்தில் பார்த்தால் டாடா பஞ்ச்.ev என்பது நிச்சயம் மேலும் பல வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறும். இது பார்ப்பதற்கு கம்பீரமான கார்; அதே சமயம் காம்பாக்ட்டான கார். இடவசதி உள்ள கார். குறுகலான நகர்ப்புற வீதிகளில் ஓட்ட எளிது. நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளதால் மோசமான சாலைகளிலும் அலுப்பில்லாமல் பயணிக்கலாம். நல்ல ரேஞ்ச் மற்றும் வேகமான சார்ஜிங் வசதி கொண்டதால் வெளியூர் பயணத்திற்கும் ஏற்ற கார்.”

இதனைத் தொடர்ந்து டாடா மோட்டர்ஸின் சீஃப் பிராடக்ட் ஆபீசர் ஆனந்த் குல்கர்னியுடன் உரையாடினோம்.

அவர்,``அறிமுகமான நாளிலிருந்து நாற்பதாயிரம் டாடா பஞ்ச்.ev கார்கள் விற்பனையாகியுள்ளன. வாடிக்கையாளர்கள் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும், அவர்களின் கருத்துகளையும் பெற்றோம். அதை அடிப்படையாகக் கொண்டு டாடா பஞ்ச்.ev-யை பல்வேறு வகையில் மேம்படுத்தியிருக்கிறோம்.

உதாரணமாக, செயல்திறனை 5% மேம்படுத்தும் வகையில் இதன் மோட்டார், கண்ட்ரோலர், கியர்பாக்ஸ் ஆகியவற்றை தனித்தனியாக இருந்து ஒரே யூனிட்டாக மாற்றினோம். அதனால் இது காம்பாக்ட்டாக மாறியது மட்டுமல்ல, இதன் எடையும் குறைந்துள்ளது.

Anand Kulkarni

அடுத்து, வெளியூர் செல்லும் போது ‘இதன் பேட்டரி தீர்ந்துபோய்விடுமோ?’ என்ற அச்சம் எந்த வாடிக்கையாளருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக 25 kWh, 35 kWh பேட்டரி ஆப்ஷன்களுக்கு பதிலாக 35 kWh மற்றும் 40 kWh பேட்டரிகளை வழங்கியுள்ளோம். இதனால் இதன் ரேஞ்ச் 20% வரை அதிகரித்துள்ளது. அதாவது, இப்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் 335 முதல் 355 கி.மீ வரை பயணிக்க முடியும்.

சிலிண்ட்ரிக்கல் செல்கள் இருந்த இடத்தில் இப்போது பிரிஸ்மாட்டிக் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பேட்டரி அளவு அதிகமானாலும் எடை அதிகரிக்கவில்லை. மேலும், 20 முதல் 80% வரை சார்ஜ் செய்ய சுமார் 27 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

இது மின்சார வாகனம் என்றாலும், மழைநீர் 400 மி.மீ உயரம் வரை தேங்கி நின்றாலும் டாடா பஞ்ச்.ev எந்த தடையும் இன்றி பயணிக்கும்.

இப்போது இதன் பின்னிருக்கைகளின் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. டிக்கியிலும் அதிக பொருட்களை வைக்க முடியும்.”

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.