ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், மைதானத்திற்குள் கூடுதல் வீரர்களின் தலையீட்டைக் குறைக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிரடியான புதிய விதியைக் கொண்டுவந்துள்ளது.
இனிமேல் டாஸ் போடும்போது கேப்டன்கள் சமர்ப்பிக்கும் 16 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லாத எந்தவொரு வீரரும், எல்லைக்கோட்டிற்கு (Boundary line) அருகில் நடமாடவோ அல்லது ஆடுகளத்திற்குள் நுழையவோ அனுமதி கிடையாது.
ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் கூடுதல் வீரர்கள் களத்திற்குள் சென்று செய்திகளைத் தெரிவிப்பதையும், பானங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு செல்வதையும் தடுப்பதற்காக இந்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
புதிய விதியின்படி, 16 பேர் கொண்ட பட்டியலில் உள்ள வீரர்களில் ‘பிப்’ (அடையாள கவசம்’ அல்லது ‘மேலங்கி) அணிந்த 5 மாற்று வீரர்கள் மட்டுமே எல்லைக்கோட்டிற்கு அருகே நடமாட அனுமதிக்கப்படுவார்கள். மற்ற கூடுதல் வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக டக்அவுட் (Dugout) பகுதியிலேயே அமர்ந்திருக்க வேண்டும்; அவர்கள் விளம்பரப் பலகைகளுக்கும் எல்லைக்கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் உலா வரக் கூடாது.
நடுவர்களின் அனுமதியின்றி பானங்களைக் கொண்டு செல்லவும், ஆட்ட நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூடுதல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட விரும்பினால், அவர்கள் கண்டிப்பாக அணிப் பயிற்சிக்கான பிப்-ஐ அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.