கோடைக்காலம் காலடி எடுத்து வைத்தவுடன் “பழங்களின் அரசன்” எனப் போற்றப்படும் மாம்பழத்தின் மீதான ஆர்வம் உச்சத்தை அடைகிறது. பச்சை மாங்காய் மற்றும் பழுத்த மாம்பழம் இரண்டுமே தனித்துவமான சுவையையும், உடல்நல நன்மைகளையும் வழங்குகின்றன. அறிவியல் பார்வையில் இவ்விரண்டிலும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன; ஆனால் அவை உடலில் செயல்படும் விதமும் தரும் பலன்களும் வேறுபட்டவையாகும்.

பச்சை மாங்காய், வைட்டமின் C-யின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதுடன், கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு மற்றும் நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது. உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை சீராக வைத்துக் கொண்டு, வெப்பக்காய்ச்சல் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
உப்பு அல்லது மிளகாய் தூளுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமானத்தை தூண்டி, அமிலத்தன்மை, வாந்தி உணர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடலின் இயக்கத்தை சீரமைத்து, உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஆதரவாக அமைகிறது.
மற்றுபுறம், மாம்பழம் பழுக்கும் போது அதிலுள்ள மாவுச்சத்து இயற்கை சர்க்கரையாக மாறி உடனடி ஆற்றலை வழங்கும் இனிப்பான பழமாக மாறுகிறது. பழுத்த மாம்பழங்களில் வைட்டமின் A மற்றும் பீட்டா-கரோட்டின் அதிகம் இருப்பதால், கண் பார்வை மேம்பாட்டிலும் தோல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன.
அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, முதுமை அடையாளங்களை தாமதப்படுத்த உதவுகின்றன. மேலும், இயற்கை நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுவதோடு, உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கும் நல்ல தேர்வாகும்.ஆயுர்வேதக் கோணத்தில், பச்சை மாங்காய் உடல் வெப்பத்தையும் பித்தத்தையும் கட்டுப்படுத்தி குளிர்ச்சியை அளிக்கிறது.
பழுத்த மாம்பழம் வாதத்தை சமநிலைப்படுத்தி உடலுக்கு வலிமை மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இருப்பினும், மாம்பழங்களை அளவுக்கு மீறி உட்கொள்வதில் முன்னெச்சரிக்கை அவசியம். குறிப்பாக, பழுத்த மாம்பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு, முகப்பரு, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.அதேபோல், மூட்டு வலி அல்லது கீல்வாதம் உள்ளவர்கள் பச்சை மாங்காயை அதிகமாக தவிர்ப்பது நல்லது; அதன் புளிப்புத்தன்மை வலியை அதிகரிக்கக்கூடும். பச்சை மாங்காயின் மேற்பரப்பில் காணப்படும் பிசுபிசுப்பான பால் போன்ற சாறு முறையாக சுத்தம் செய்யாமல் எடுத்துக்கொண்டால், தொண்டை அரிப்பு அல்லது வயிற்று கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், பூச்சிக்கொல்லி மீதிப்பொருட்களை தவிர்க்க, மாம்பழங்களை நன்றாக கழுவி சாப்பிடுவது அவசியம்.முடிவாக, பச்சை மாங்காயும் பழுத்த மாம்பழமும் தத்தமது தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. உடல் சூட்டை தணித்து எடையை கட்டுப்படுத்த விரும்புவோர் பச்சை மாங்காயை தேர்வு செய்யலாம். கண் ஆரோக்கியம், சக்தி மற்றும் தோல் பொலிவை மேம்படுத்த விரும்புவோர் பழுத்த மாம்பழத்தை தேர்வு செய்யலாம். எந்த உணவாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்வதே உடல்நலத்திற்கு சிறந்த வழி என்பதும் தெரவிக்கப்படுகிறது.