“சிறையில் ஏகப்பட்ட கொடுமை... பெயரை சொல்லக்கூட அறுகதையற்றவர் இபிஎஸ்”- சசிகலா
Top Tamil News April 11, 2026 01:48 AM

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் சசிகலா இத்தொகுதியில் போட்டியிடும் சந்திராவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,“2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்த பின்பு நான் கட்சியை காப்பாற்ற வேண்டும், நான் முதலமைச்சராக வேண்டும் என கட்சி முக்கிய தலைவர்கள் எனது வீட்டிற்கு வந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே தான் கவர்னர் அலுவலகத்தில் எனக்கான பெரும்பான்மை கடிதத்தை கொடுத்தேன். அப்போது வெளிவந்த தீர்ப்பின் அடிப்படையில் நான் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்தது. அதன் காரணமாக ஏற்கனவே முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த நிலையில் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஒருவருக்கு அந்த பதவியை அளித்தேன். அவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். அவர் பெயரை சொல்லக்கூட, அறுகதையற்ற நபராக அவர் இருக்கிறார்.

நான் அவருக்கு பதவியை வழங்கிவிட்டு சிறைக்குச் சென்ற இரண்டு மாதங்களிலேயே அவர் என்னை கட்சியை விட்டு நீக்கினார். அதுமட்டுமில்லாமல் அவர் தனது அதிகாரத்தை கொண்டு அதிகாரிகளின் மூலமாக எனக்கு சிறையில் ஏகப்பட்ட கொடுமைகளை செய்தார். தொடர்ந்து 4 வருடங்களுக்கு பின்பு  சிறையை விட்டு வெளியே வந்த போது எனது காரில் கட்சி கொடி மாட்டக்கூடாது. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்லக்கூடாது என்று தடை செய்தார்கள். நான் பொறுமையாக நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது கட்சியை காப்பாற்ற வேண்டும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் தான் இப்போது வந்திருக்கிறேன்” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.