கும்பமேளா அழகி மோனாலிசா வழக்கில் அதிரடித் திருப்பம்: கணவர் மீது போக்சோ பாய்ந்தது - சிறுமி என அம்பலமான உண்மை!
Seithipunal Tamil April 11, 2026 03:48 AM

2025-ம் ஆண்டு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் மாலை விற்றபோது, தனது வசீகர கண்களால் இணையதளங்களில் ஒரே இரவில் வைரலானவர் மோனாலிசா (எ) மோனி போஸ்லே. இந்த 'கும்பமேளா அழகி'யின் வாழ்க்கை, தற்போது ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்தைச் சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 11, 2026 அன்று கேரளா பூவார் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், நடிகர் ஃபர்மான் கானை அவர் காதல் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவர் 18 வயது நிரம்பியவர் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் ஒரு மைனர் (சிறுமி) என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தேசிய பழங்குடியினர் ஆணையம் (NCST) மேற்கொண்ட தீவிர விசாரணையில், மத்தியப் பிரதேசத்தின் மகேஸ்வர் மருத்துவமனை பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, மோனாலிசாவின் உண்மையான பிறந்த தேதி டிசம்பர் 30, 2009 என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, திருமணம் நடந்தபோது அவருக்கு வயது 16 ஆண்டுகள் 2 மாதங்கள் மட்டுமே. அவர் பார்தி (Pardhi) எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்திலுள்ள மகேஸ்வர் காவல் நிலையத்தில் ஃபர்மான் கான் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போலி பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தித் திருமணத்தைப் பதிவு செய்ததற்காக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் மோனாலிசாவின் சமூக அடையாளத்தைக் கருத்தில் கொண்டு எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கேரளாவில் இந்தத் திருமணத்தைப் பதிவு செய்யப் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதை ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள தேசிய பழங்குடியினர் ஆணையம், ஏப்ரல் 22-ம் தேதி டெல்லியில் நேரில் ஆஜராகுமாறு கேரளா மற்றும் மத்தியப் பிரதேச டிஜிபி-களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறி, குடும்பத்தாரை எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்பட்ட மோனாலிசாவின் கதை, தற்போது போலி ஆவணங்கள் மற்றும் குழந்தை திருமண வழக்காக உருவெடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.