பரமக்குடி அருகே சோகம்; குடிலில் தீப்பிடித்து 40 செம்மறி ஆடுகள் பரிதாபமாக பலி..!
Seithipunal Tamil April 11, 2026 03:48 AM

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, குடில் தீப்பிடித்தில் 40 செம்மறி ஆடுகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே புதுக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், விவசாயியான இவர், 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். 

இதனை வளர்ப்பதற்காக வீட்டின் அருகே வயல்வெளியில் சிறிய குடில் அமைத்து, அதில் ஆடுகளை அடைத்து பராமரித்து வந்துள்ளார். சம்பவ தினமாக நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் வயல்களில் நெல் அறுவடை பணி நடந்த நிலையில்,  அறுவடை முடிந்த பிறகு சிலர் வயலுக்கு தீ வைத்துள்ளனர். துரதிஸ்டவசமாக இரவில் இந்த தீ பரவி ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிலில் பற்றியுள்ளது. 

தீயில் சிக்கிய ஆடுகளின் சத்தம் கேட்டு முத்துக்குமார் உள்ளிட்ட சிலர் சேர்ந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனாலும், சிறிது நேரத்தில் குடில் முழுவதும் தீ மளமளவென பரவிய நிலையில், இதில் சுமார் 40 செம்மறி ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்து ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டதால் முத்துக்குமார் குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.