வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தமிழக வானிலையில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில், ஒடிசாவின் உள்பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள் தமிழகத்தை கடந்து செல்லும் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது.

இதனுடன், வடக்கு தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சியும் உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 4 முக்கிய மாவட்டங்களில் இன்று மாலை முதல் இரவு 7 மணி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.