எல்.முருகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து...! 'ஆதாரம் இல்லை'....! -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Seithipunal Tamil April 11, 2026 12:48 AM

2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் சூழலில், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எல். முருகன் மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி, தனது ஆதரவாளர்களுடன் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கர் கோவிலுக்குள் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்ட துணியுடன் சென்று, பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என திமுகவைச் சேர்ந்த பார்த்திபன் புகார் அளித்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புகாரின் அடிப்படையில், காவலர்கள் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியிருந்தனர். இதனை எதிர்த்து, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எல். முருகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர். சக்திவேல், குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என வாதிட்டார்.

வாதங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதுமான ஆதாரமின்றி முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சர் எல். முருகன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.