சென்னை, ஏப்ரல் 11, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 4,000-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்காக கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. அதன் பின்னர், ஏப்ரல் 6ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த தகவல்கள் சரியானதா, வேட்புமனுக்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா, ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்பன உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் படிக்க: சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம்..
களத்தில் 4000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்:இதன் பின்னர், இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 4,051 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 7,500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 4,000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பரிசீலனைக்குப் பிறகு 500-க்கும் மேற்பட்டோர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரச்சாரம் மீண்டும் ரத்து.. ஏமாற்றத்தில் மக்கள்..
தமிழகத்தில் 4 முனைப்போட்டி:இந்த முறை தேர்தலில் 4,000-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிமற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவற்றுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், இந்த முறை ஆட்சியை அமைக்கப் போவது யார், எந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம், மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.