உகாண்டாவின் கிபாலே தேசிய பூங்காவில் உள்ள ‘நோகோ’ (Ngogo) இன சிம்பன்சிகளிடையே ஏற்பட்டுள்ள பயங்கர ‘உள்நாட்டுப் போர்’, விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்டு ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இந்த மிகப்பெரிய சமூகம், தற்போது இரண்டு எதிரெதிர் குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் வேட்டையாடும் கொடூரமான மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் படிப்படியாகப் பிரிந்த இந்த இரு குழுக்களும், தற்போது தங்கள் எல்லைகளைக் காக்க எல்லையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவதோடு, முன்னாள் நண்பர்களையே ஈவிரக்கமின்றித் தாக்கி உயிரைப் பறிக்கும் அளவிற்கு ஆக்ரோஷமாக மாறிப்போயுள்ளன.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற விலங்கியல் நிபுணர் ஜேன் குட்டால் டான்சானியாவில் இத்தகைய மோதலைப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது உகாண்டாவில் அதைவிடப் பெரிய அளவில் அரங்கேறும் இந்த சிம்பன்சிகளின் அதிகாரப் போர் அறிவியலாளர்களுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது.
டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆரோன் சாண்டல் தலைமையிலான குழுவினர் ‘சயின்ஸ்’ இதழில் இது குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். உணவு மற்றும் தண்ணீருக்காகப் பல்வேறு சிம்பன்சி கூட்டங்களுக்கு இடையே சண்டை நடப்பது சகஜம் என்றாலும், ஒரே குடும்பமாக இருந்த சமூகம் இரண்டாகப் பிரிந்து தங்களுக்குள் போர் தொடுப்பது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. இது விலங்குகளின் சமூகக் கட்டமைப்பு குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.