புதுச்சேரி வாக்குப்பதிவில் புதிய உச்சம்.. யாருக்குச் சாதகம்?.. கலக்கத்தில் அரசியல் கட்சிகள்..
TV9 Tamil News April 11, 2026 02:48 PM

Puducherry Polls 2026: புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவில் புதிய உச்சம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனால் யாருக்கு சாதகம்? என்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். புதுச்சேரி சட்டசபைக்கு 1964-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 14 தேர்தல்கள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் (ஏப்.9) நடந்த 15வது சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு 91.23 சதவீதத்தை எட்டி புதுச்சேரி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி (SIR) முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!

91.23% வாக்குப்பதிவு:

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக புதுவையில் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் இருந்தனர். தீவிர திருத்தப்பணிகள் முடிந்து கடந்த மாதம் 23-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி புதுவையில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 639 வாக்காளர்கள் இடம் பெற்றனர். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வந்து வாக்களித்தனர். அதாவது 8 லட்சத்து 67 ஆயிரத்து 269 பேர் வாக்களித்துள்ளனர். இது 91.23 சதவீதம் ஆகும். எனவே, வாக்கு சதவீதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

2011ல் வாக்குப்பதிவில் உச்சம்:

ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 85.57 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததே புதிய உச்சமாக கருதப்பட்டது. இளம் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததில் தவெக தலைவர் நடிகர் விஜய் முக்கிய காரணமாக உள்ளார். இதேபோல் இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வேட்பாளர்கள் பண மழையை பொழிய விட்டனர். தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருந்த அரசியல்வாதிகள் கடந்த 2 ஆண்டுகளாக வீடு வீடாக சென்று மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்களை வாரி வழங்கி வந்தனர்.

அரசியல் கட்சியினர் கலக்கம்:

பொதுவாக அதிக வாக்குப்பதிவு நடந்தாலே அது ஆளும் கட்சிக்கு எதிரானதாக இருக்கும் என்பதுதான் இதுவரை நடந்த நிகழ்வு. சில நேரம் ஆளுங்கட்சியின் நல்ல செயல்பாட்டால் கூட அதிக வாக்குகள் பதிவாவதும் உண்டு. எனவே, புதுச்சேரியில் புதிய உச்சம் தொட்ட வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்? என்று கணிக்க முடியாமல் உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க: தமிழக தேர்தல் “பிக்பாஸ்”.. 234 தொகுதிகள்.. 4,500 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமியும், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பியும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? என்பதை அறிய மே 4-ந்தேதி வரை காத்திருக்க வேண்டியதுதான்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.