நெல்லை: வளர்ப்பு மகளை வன்கொடுமை செய்த தந்தை - சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
Vikatan April 11, 2026 04:48 PM

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான எலக்ட்ரிசீயன். கருத்து வேறுபட்டால் இவரின் முதல் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரீசியன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்த 11 வயது சிறுமியை வளர்த்து வந்தார். இதற்கிடையில் எலக்ட்ரீசியனுக்கும் இரண்டாவது மனைவிக்கும் ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தனர்.

நெல்லை நீதிமன்றம்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரின் நடவடிக்கையில் மாற்றங்களை அந்த பெண் கண்டார். அவர் தன் செல்போனியில் தானியங்கி கால் ரெக்கார்டரில் பதிவாகியிருந்த சமீபத்திய அழைப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது தன்னுடைய கணவர், தனது மூத்த மகளான முதல் கணவருக்கு பிறந்த 11 வயது மகளுடன் ஆபாசமாக பேசியுள்ளதைக் கேட்டுள்ளார்.

அத்துடன், தன் மகளிடம் ஆறுதலாகப் பேசி சிறுமிக்கு நடந்த கொடுமையைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்த தாய், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் சுதா, எலக்ட்ரிசீயனை கைது செய்தார். 5 வேலை நாட்களில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டன. வழக்குப்பதிவு செய்த 29வது நாளான நேற்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறுமியின் வளர்ப்பு தந்தையே சிறுமியை வன்கொடுமை செய்ததால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அத்துடன், தந்தையால், பாதிக்கப்பட்ட அவரது வளர்ப்பு மகளான 11 வயது சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும், அச்சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை அந்த தொகை, வங்கியில் டெப்பாசிட் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே மிக குறுகிய நாட்களில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கு இது என்கிறார்கள். .

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.