'ஜனநாயகன்' வெளியானதில் அப்செட்?! இன்றைய விஜய் பிரசாரம் ரத்து!
Dinamaalai April 11, 2026 02:48 PM

கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த விஜய்யின் பிரசாரப் பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் பிரசாரம் ரத்தாகியுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘ஜனநாயகன்’ முழு படமும் இணையத்தில் வெளியான விவகாரத்தில், தன்னுடைய கடைசிப் படம் தயாரிப்பாளருக்கு இப்படி பல கோடி நஷ்டம் ஏற்படுத்தியதில் விஜய் பயங்கர அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (ஏப். 11) கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி கடலூர் வடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நான்கு முக்கிய இடங்களில் அவர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே கடந்த 9ம் தேதியே கடலூரில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்து, பின்னர் அது ரத்தானது. இந்த நிலையில், இன்று பிரசாரம் செய்வதற்குத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் முறையான அனுமதி பெறப்பட்டு, மேடைகள் அமைக்கும் பணிகள் கூடத் தொடங்கின. ஆனால், கடைசி நேரத்தில் "நிர்வாகக் காரணங்களுக்காக" பிரசாரம் ரத்து செய்யப்படுவதாகத் தவெக தலைமை அறிவித்துள்ளது.

பிரசார வாகனத்தின் தொழில்நுட்பக் கோளாறா? அல்லது பாதுகாப்பு விவகாரங்கள் ஏதேனும் உள்ளதா? அல்லது தேர்தல் வியூகக் குழுவின் கடைசி நேரத் திட்ட மாற்றமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமான விரிவான விளக்கம் அளிக்கப்படாமல் நிர்வாக காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது. தங்களது தலைவரை நேரில் காணவும், பிரசாரத்தில் பங்கேற்கவும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காலை முதலே திரளத் தொடங்கினர். ஆனால், மீண்டும் பிரசாரம் ரத்து என்கிற தகவல் இடியென இறங்கியது. "அடுத்தடுத்து இரண்டு முறை அனுமதி கிடைத்தும் பிரசாரம் ரத்து செய்யப்படுவது தேர்தல் களத்தில் எங்களைப் பலவீனப்படுத்தும்" எனத் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கடலூர் மாவட்ட பிரசாரம் மீண்டும் எப்போது நடைபெறும் என்கிற புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், நாளை சென்னை அல்லது பிற மாவட்டங்களில் திட்டமிட்டபடி பிரசாரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் களத்தில் முதல் தேர்தலைச் சந்திக்கும் தவெக, இது போன்ற நிர்வாகச் சிக்கல்களைச் சந்திப்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.