தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் அவர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, 1997-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அபின் தினேஷ் புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை அவர் முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தற்போதைய சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடையும் வரை, ஏ. அருண் அவர்களுக்கு தேர்தல் தொடர்பான எந்தவொரு பணிகளிலும் பொறுப்புகள் வழங்கப்பட கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் இந்த இடமாற்ற நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. பொதுவாக தேர்தல் காலங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம்.
இந்த அதிரடி மாற்றத்தை தொடர்ந்து சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva