“என்னை வந்து சுடுங்க பார்க்கலாம்!”.. டாஸ்மாக்கை மூடுவேன்.. கள் இறக்குவேன்.. மதுவிலக்கு குறித்து சீமான் வெளியிட்ட அதிரடி திட்டம்..!!
SeithiSolai Tamil April 12, 2026 11:48 AM

தென்காசி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான், பனைத் தொழிலாளி சுடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆவேசமாகப் பேசினார். பனை ஏறும் தொழிலாளியைச் சுட்டது தவறு எனக் குறிப்பிட்ட அவர், தானும் கள் இறக்கப் போவதாகவும், முடிந்தால் தன்னை வந்து சுடுங்கள் என்றும் அரசுக்குச் சவால் விடுத்தார்.

மேலும், துப்பாக்கியால் சுட்டவர்களை அதே பனை மரத்தில் கட்டி வைத்து அடிப்பேன் என்றும், தான் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு பனை மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி அளிப்பேன் என்றும் உறுதி அளித்தார்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு கேட்கும் முறையைச் சாடிய சீமான், மக்கள் தங்கள் உரிமையை ஒருபோதும் இழக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிதியுதவி செய்யும் அரசு, காலில் அடிபட்ட பனைத் தொழிலாளி குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

காமராஜர் கொடுத்த ஆட்சியை விடச் சிறந்த ஆட்சியைத் தான் கொடுப்பேன் என்று கூறிய அவர், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குப் பதில் தனக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.