நாட்டில் இதுவரை இருக்கை வசதியுடன் மட்டுமே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரெயில்களுக்கு புதிய பரிமாணமாக, தற்போது படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடக்கமாக, மேற்கு வங்காளத்தின் ஹவுரா மற்றும் அசாமின் காமக்யா இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை அறிமுகமாகி உள்ளது.

கடந்த ஜனவரி 17ஆம் தேதி இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, இரண்டாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயிலை மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையே இயக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை சி.எஸ்.எம்.டி. மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு (சிட்டி) இடையே இந்த அதிவேக ஸ்லீப்பர் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.
தற்போது மும்பை-பெங்களூரு இடையேயான 1,136 கிலோமீட்டர் தூரத்தை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் 24 மணி நேரத்தில் கடந்து வருகின்றன. ஆனால், வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை அறிமுகமானதும் இந்த பயண நேரம் 16 முதல் 18 மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில், பயணிகளுக்கு அதிக வசதியுடனும், நவீன அம்சங்களுடனும் கூடிய சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.