பகீர்.. மகளின் சடலத்துடன் 4 மாதங்கள் வசித்து வந்த தந்தை... துர்நாற்றம் வராமல் இருக்க 'பெர்ப்யூம்' தெளித்து பராமரிப்பு!
Dinamaalai April 13, 2026 12:48 AM

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது மகளின் உடலை தகனம் செய்ய மனமில்லாமல், அந்த உடலுடனேயே முதியவர் ஒருவர் 4 மாதங்களாக வசித்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்நாற்றம் வீசாமல் இருக்க மகளின் சடலத்தின் மீது வாசனை திரவியங்களைத் தெளித்து அவர் பாதுகாத்து வந்துள்ளார்.

மீரட் மாவட்டத்தின் சாதர் பகுதியைச் சேர்ந்தவர் உதய் பான் பிஸ்வாஸ் (75). ஓய்வு பெற்ற அரசு எழுத்தரான இவருடன், அவரது மகள் பிரியங்கா பிஸ்வாஸ் (35) வசித்து வந்தார். ஆசிரியை ஆகப் பணியாற்றி வந்த பிரியங்கா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மகள் இறந்த செய்தியை யாரிடமும் சொல்லாத உதய், அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய மறுத்து விட்டார். மகளின் உடலை வீட்டின் படுக்கையிலேயே கிடத்தி, கடந்த 4 மாதங்களாக அதனுடனேயே வசித்து வந்துள்ளார். சடலம் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, அதன் மீது தொடர்ந்து 'பெர்ப்யூம்' (Perfume) அடித்து வந்துள்ளார். இதனால் உடல் முழுவதுமாக வற்றிப்போய், தற்போது வெறும் எலும்புக்கூடாக மாறியுள்ளது.

உறவினர்கள் உதயைத் தேடி வந்தபோது, அவர் பெகாபாக் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது தான், 4 மாதங்களாக அவர் மறைத்து வைத்திருந்த இந்த பயங்கரம் தெரியவந்தது. வீட்டிற்குள் எலும்புக்கூடாகக் கிடந்த பிரியங்காவைப் பார்த்து உறவினர்கள் அலறியடித்து ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், பிரியங்காவின் எலும்புக்கூட்டை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். 75 வயதான முதியவர் உதயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் மீதிருந்த அதீத பாசத்தினால் அவர் இவ்வாறு செய்தாரா அல்லது அவருக்கு ஏதேனும் மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.