தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தூத்துக்குடி மாவட்டத் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) சலசலப்பை ஏற்படுத்தி வந்த அஜிதா ஆக்னல், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர், இப்போது திமுக முகாமிற்குத் தாவியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அஜிதா ஆக்னல் கடந்த சில மாதங்களாகவே தவெக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அது கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதன் உச்சகட்டமாக, தலைவர் விஜய்யின் காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு (சீட்) கிடைக்கும் என நம்பியிருந்தார். ஆனால், தவெக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாததால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் அக்கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.
இன்று (ஏப். 12) மாலை, திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்களை நேரில் சந்தித்த அஜிதா ஆக்னல், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்குக் கனிமொழி சால்வை அணிவித்து வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக-வை வலுப்படுத்தத் தொடக்க காலத்திலிருந்து பணியாற்றிய ஒரு பெண் நிர்வாகி, இப்போது ஆளுங்கட்சியான திமுகவிற்குச் சென்றிருப்பது தவெக-வின் தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அஜிதா ஆக்னல் கூறுகையில், "உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் இடத்தில் பயணிக்க முடிவெடுத்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.