தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப். 12) பரப்புரை மேற்கொண்டார். தனது வழக்கமான பாணியில் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளை அவர் கடுமையாகச் சாடினார்.
கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய சீமான், அரசியலுக்கும் தலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார். “அடுத்த தேர்தலை பற்றி மட்டும் சிந்திப்பவன் ஒரு சாதாரண அரசியல்வாதி. ஆனால், அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவன் தான் உண்மையான தலைவன். நாங்கள் தேர்தலுக்காக வரவில்லை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வந்திருக்கிறோம்.”
திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் அறிவிக்கும் பண விநியோகம் மற்றும் உரிமைத் தொகைத் திட்டங்களை அவர் கடுமையாக விமர்சித்தார். "தேர்தல் நேரத்தில் ரூ.2,000, ரூ.10,000 தருகிறேன் என்று சொல்வதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.
மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் மாதம் ரூ.1,000 கொடுக்கிறார்கள். இதைக் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு நாளைக்கு வெறும் 33 ரூபாய் மட்டுமே வருகிறது. இது என்ன கணக்கு? எனது வயலில் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 கூலி கொடுக்கிறேன். ஆனால், அரசாங்கம் ஒரு நாளைக்கு 30 ரூபாய் கொடுத்துவிட்டு, அதை ஒரு பெரிய சாதனையாகப் பேசுகிறது," எனச் சாடினார்.
விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் காப்பதே தனது கட்சியின் முதன்மையான நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், காசுக்காக வாக்குகளை விற்பது நமது எதிர்காலத்தைச் சிதைக்கும் செயல் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். உசிலம்பட்டி தொகுதியில் 'விவசாயி' சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.