கார் டேங்கர் லாரியுடன் மோதியதில் விபத்து; பிரபல நடிகர் அகால மரணம்..!
Seithipunal Tamil April 13, 2026 05:48 AM

கன்னட சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபாலமான நடிகர் ஹரிஷ் அகால மரணமடைந்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுக்காவில் உள்ள அனேகாட் வனப்பகுதிக்கு அருகே, ஹரிஷ் ஓட்டிச் சென்ற கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டு,ஹரிஷ் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஹரிஷ் வேலையை முடித்துவிட்டு குஷால்நகரிலிருந்து தனது சொந்த ஊரான ஹோஸ்கோட்டிற்கு காரில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது அவரது கார் மோதிய வேகத்தில் கார் முற்றிலுமாக நசுங்கிப் போனதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் நடிகர் ஹரிஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், குஷால்நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும் ஹரிஷ் உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணையைத் தொடர்கின்றனர். 40 வயதான ஹரிஷ், நடிகராக பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.