அணு ஆயுத போட்டி காரணமாக ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுத்தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவியது. தற்போது 02 வாரம் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்த ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக காலத்திற்கு நீடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, இந்த போர் தொடங்குவதற்கு முன்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பணவீக்கம் 02 சதவீத இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால், தற்போதைய சூழலில் அது மேலும் தாமதமாகலாம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதால், கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் விலை பணவீக்கம் 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு வேகமான உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வாஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று தனது 'உலகப் பொருளாதார நிலைமைகள்' குறித்த அறிக்கையை வெளியிடவுள்ளது.
அதாவது, ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு உலகப் பொருளாதார வளர்ச்சியில் சிறு முன்னேற்றம் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கணிப்பை குறைக்கப்போவதாக ஜார்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த பொருளாதார வீழ்ச்சியின் அளவு, போர் எவ்வளவு காலம் நீடிக்கிறது மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி எவ்வளவு விரைவில் பழைய நிலைக்குத் திரும்புகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என தெரிவித்துள்ளார்.