எடப்பாடி பழனிசாமியின் தொடர் விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வாய்க்கொழுப்பு எடுத்துச் சாக்கடைக்குச் சரிசமமாகப் பேசுவதாகச் சாடிய ஸ்டாலின், அவர் மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதாகவும், பெண்களைக் கண்ணியம் இல்லாமல் பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
”கொள்கையற்ற அடிமைக் கூட்டத்தையும், தமிழ்நாட்டை அடகு வைக்கத் துடிக்கும் துரோகக் கூட்டத்தையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும்” என்று ஆவேசமாக முழங்கிய முதல்வர், பழனிசாமியின் இத்தகைய வார்த்தைகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்தார். தான் செய்த சாதனைகளைப் புள்ளி விவரங்களுடன் அடுக்கி வருவதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாகவும் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.