அறுவடைக்கு காத்திருந்த பயிரை காட்டுப்பன்றிகள் அழிப்பது போல… ஜன நாயகன் விவகாரத்தில் தம்பி ராமையா கருத்து
CineReporters Tamil April 14, 2026 11:48 PM

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் கடைசி திரைப்படமாக பிரம்மாண்டமாக தாயாரானது ஜன நாயகன் . படம் வெளியீட்டு தயாராகியும் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் இன்று வரை வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் ஜன நாயகன் படம் சமீபத்தில் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியது. பல நூறு கோடி ரூபாய் பொருட்செலவில், பலரின் கடின உழைப்பில் உருவான இப்படம் வெளியீட்டிற்கு முன்பே பைரசி இணையதளங்களில் கசிந்தது திரைத்துறையினரை மட்டுமின்றி, சினிமா ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடார்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவும் ஜன நாயகன் லீக் விவகாரத்தில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், அறுவடைக்குத் தயாராகக் காத்திருந்த பயிர்களை, கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் கடித்துக் குதறி அழிக்கும் போது, அந்த நிலத்தை நம்பி வாழும் விவசாயிகளின் மனநிலை எப்படித் துடிக்குமோ… அந்த வேதனையும் வலியும் எப்படி இருக்குமோ… அப்படித்தான் இப்போது இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களின் மனநிலையும் உள்ளது. இதை நினைக்கும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையும், பலரது கனவுகளும், தயாரிப்பாளரின் பல கோடி ரூபாய் முதலீடும் அடங்கியுள்ளது. அதை ஒரு நொடியில் இப்படித் திருட்டுத்தனமாக வெளியிடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்த விவகாரம் குறித்துக் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.