
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான வர்த்தக பாதையான மலாக்கா நீரிணை மீது அமெரிக்கா தனது கவனத்தை திருப்பியுள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், அந்நாட்டு வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்களுக்கு கூடுதல் அனுமதியை வழங்கியுள்ளது. இது மலாக்கா நீரிணையை அமெரிக்கா இன்னும் நெருக்கமாக கண்காணிக்க வழிவகை செய்யும்.
உலக வர்த்தகத்தில், குறிப்பாக எரிசக்தி மற்றும் மின்னணு பொருட்கள் போக்குவரத்தில் மலாக்கா நீரிணை ஒரு உயிர்நாடியாக திகழ்கிறது. சீனாவின் எரிசக்தி இறக்குமதியில் பெரும்பகுதி இதன் வழியாகவே நடப்பதால், பெய்ஜிங்கிற்கு இது ஒரு பலவீனமான புள்ளியாகும்.
அமெரிக்கா தனது இந்தோ-பசிபிக் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முக்கிய கடல்வழி பாதையைத் தனது கட்டுப்பாட்டில் அல்லது கண்காணிப்பில் வைத்திருக்க விரும்புகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மலாக்கா நீரிணையின் நுழைவாயிலில் அமைந்துள்ளதால், புவிசார் ரீதியாக இந்தியா ஒரு மிகப்பெரிய நன்மையை பெற்றுள்ளது. கேம்ப்பெல் பே போன்ற இடங்களில் இந்தியாவின் ராணுவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவது, இப்பகுதியின் பாதுகாப்பில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துகிறது.
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்புக்கு இது ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
Edited by Siva