மத்திய பாஜக அரசு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்காக ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இதில் மொத்தம் 816 தொகுதிகள் உருவாக்கப்பட்டு, அதில் 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும், இதற்காக பாஜக எம்.பி-க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகத்தின் தொகுதிகள் குறையும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஆனால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்துச் செல்ல விரும்புவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்த வாய்ப்புள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தின் எம்.பி-க்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயருமே தவிர குறையாது என்றும், உண்மை நிலை இப்படியிருக்க முதலமைச்சர் எதற்காகப் பொய்களைக் கூறி மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.