Pakistan: நாட்டாமையாக காட்டிக்கொண்ட பாகிஸ்தான்..! பில் கட்டுவது யார்? ஸ்டார் ஓட்டலால் வெடித்த சர்ச்சை
குலசேகரன் முனிரத்தினம் April 15, 2026 01:14 PM

Pakistan: அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் பாகிஸ்தானின் முயற்சி, கட்டண விவகாரத்தால் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

ஒட்டல் கட்டணம் செலுத்தவில்லையா?

சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா - ஈரான் போரை, முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் தீவிர ராஜாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் இந்த அசாத்தியமான செயலானது கொள்கை அடிப்படையில் பாராட்டுதலுக்குட்படுவதற்கு பதிலாக, கட்டணத்தை யார் செலுத்துவது என்ற விவாதத்தால் அநாவசியமான சர்ச்சையில் சிக்கி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் குழுக்கள் பேச்சுவார்த்தை நடைபெற்ற, நட்சத்திர செரீனா ஓட்டலுக்கான கட்டணத்தை செலுத்த பாகிஸ்தான் அரசு தவறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், இன்னும் உறுதிப்படுத்தப்படமால் உள்ளது. இந்த விவகாரமானது சர்வதேச பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் பாகிஸ்தானின் முயற்சிக்கு பதிலாக, முக்கிய நிகழ்வுகளை கையாள அவர்களுக்கு திறன் இல்லை என்ற கோணத்தில் பேசுபொருளாகியுள்ளது.

paki

பாகிஸ்தானின் நிதி நெருக்கடி?

6 வாரங்களை கடந்து நடந்து வந்த அமெரிக்கா - ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்வு நடைபெற்ற ஓட்டலுக்கான கட்டணத்தை வசூலிக்க அதன் உரிமையாளரே தலையிட வேண்டியிருந்து என்ற தகவல் வெளியானதும், ஒட்டுமொத்த விவகாரமும் வேறு திசையில் மாறியது. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட சில செய்திகள், பாகிஸ்தான் அரசின் ஆழ்ந்த நிதி நெருக்கடியையே இந்த விவகாரம் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செய்தியில் ஒரு பெரிய சர்வதேச நிகழ்வின்  போது ஏற்பட்ட அடிப்படை தோல்வி எனவும் சாடப்பட்டுள்ளது. 

செலவை ஏற்றுக்கொண்ட ஓட்டல் நிர்வாகம்?

இதனிடையே, ”பேச்சுவார்த்தை குழுவினருக்கான தங்குமிடம் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், அமைதி முயற்சிகளுக்குப் பங்களிக்கும் விதமாக அகாகான் மேம்பாட்டு வலையமைப்பிற்குச் சொந்தமான செரீனா ஹோட்டல் தூதுக்குழுக்களை உபசரித்ததாகவும்” ஓட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஓட்டல் நிர்வாகம் நேரடியாகச் செலவுகளை ஏற்றுக் கொண்டதாக கூறுவது உண்மையல்ல என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. இதனால் இந்த விவகாரம் குழப்பமாக மாறியுள்ளது.  இந்த சூழலுக்கு மத்தியிலும், இந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா-ஈரான் இடையேயான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களைத் தணிப்பதற்கான தற்போதைய முயற்சிகளில் பாகிஸ்தான் இன்னும் தீவிரமாக உள்ளது என்பது தெளிவாகிறது.

இந்த செய்தியை இந்திய நெட்டிசன்கள் பலரும் நகைச்ச்சுவையாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, “அமெரிக்கா - ஈரான் போரை நிறுத்துவது குறித்து அன்றைய பேச்சுவார்த்தையில் பிரச்னை இல்லையாம். கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில் முடிவு எட்டப்படாமல் தான்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாம்” என கிண்டலடித்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.