வேண்டுதல் நிறைவேறாத விரக்தியில் விநாயகர் சிலை மீது கோபத்தை காட்டிய போதை ஆசாமி
Top Tamil News April 16, 2026 09:48 PM

வேண்டுதல் நிறைவேறாத விரக்தியில் விநாயகர் சிலையை தள்ளிவிட்ட மது போதை ஆசாமியிடம் அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அரச மரத்தின் கீழ் விநாயகர் சிலை மற்றும் பாம்பு உருவங்கள் பொறித்த இரண்டு சிலைகள் என மூன்று சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று ஊர் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் நீண்ட காலமாக அப்பகுதியைச் சேர்ந்த பல தரப்பு மக்கள் இம்மரத்தின் கீழ் குளிர்ச்சியாக இருப்பதால் எந்நேரமும் அங்கு அமர்ந்து இளைப்பாரி வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை வழிபாடு நடத்த வந்த பொதுமக்கள் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த திண்டு பகுதியில் இருந்து கீழே தள்ளி விட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த பாஜகவை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலை கீழே தள்ளப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து நல்லி செட்டிபாளையம் பகுதியில் திரண்டனர்.இந்த புகாரின் பேரில் போலீசார் நேரில் சென்று இதில் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அடுத்து நல்லி செட்டிபாளையம், பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் வெள்ளிங்கிரி (34) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 7 வருடமாக தான் மனைவியை விட்டு தனிமையில் வாழ்வதாகவும், அதற்காக இங்குள்ள விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வந்ததாகவும், இதனால் எனக்கு எந்த பயனும் கிடைக்காததால் குடிபோதையில் விரக்தியில் விநாயகர் சிலையை கீழே தள்ளினேன் என்று ஒப்புக்கொண்டார். மேலும் என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழவில்லை. பல வருடமாக எனது வேண்டுதல் மற்றும் நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. எனக்கு தேவையானது எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் இவ்வாறு செய்தேன். எனவே என்னை கைது செய்யுங்கள், சிறையில் அடையுங்கள் என போலீசாரிடம் மன்றாடி கேட்டது கேட்டுள்ளார்.  இந்நிலையில் இது குறித்து அன்னூர் போலீசார், வெள்ளிங்கிரி என்பவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.