ஸ்டாண்ட்-அப் காமெடியனாகத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் 'விக்கல்ஸ்' விக்ரம். யூடியூபிலும் இவர் பதிவிடும் காணொளிகளும் பலருக்கும் ஃபேவரைட்.
கடந்த பிக் பாஸ் சீசனில் இவர் கலந்துகொண்டு ஃபைனல் வரை வந்திருந்தார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வரவேற்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பார்கள்.
Light Weight Baby - Vikkals Vikram
அப்படி பிக் பாஸ் முடித்து வந்த விக்ரமிற்கு உடனடியாக கதாநாயகனாக நடிக்கும் பட வாய்ப்பும் வந்திருக்கிறது.
அப்படத்திற்கு 'லைட், வெயிட், பேபி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். ஹீரோவாக அறிமுகமாகும் 'விக்கல்ஸ்' விக்ரமிற்கு வாழ்த்துகள் சொல்லிப் பேசினோம்.
"ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. ஆனா அதெல்லாம் தாண்டி ரொம்ப பயமாவும் இருக்கு. இந்தப் படத்துல லீடாக நடிக்கிறேன். அதுக்கு நிறைய பொறுப்புகள். அதனால அதெல்லாம் யோசிச்சு கொஞ்சம் பயமாவும் இருக்கு.
'பிக் பாஸ்' போட்டியாளர்களுக்கு, அது ஏற்படுத்தித் தருகிற வாய்ப்புகள் பற்றி நிறைய கருத்து இருக்கும். அது அவங்களைப் பொறுத்தது. லைஃப் எப்போதுமே மாறிக்கிட்டேதான் இருக்கும்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக எனக்குக் கிடைச்ச ஃபேம் இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்குனுதான் சொல்வேன்.
Vikkals Vikram
அதுவும் இந்த வாய்ப்பு கிடைக்கிறதுக்கு பிக் பாஸும் ஒரு காரணம்தான். இந்தப் படத்துக்கு நான் வசனகர்த்தாவாகவும் இருக்கேன். இந்தப் படத்தின் இயக்குநர் பெங்களூருவைச் சேர்ந்தவர்.
அதனால தமிழ் வசனங்களை நான்தான் எழுதுறேன். இந்தப் படத்துல முதன்மை கேரக்டரும் ஸ்டாண்ட்-அப் காமெடியனாக இருப்பவன்தான்.
என்னுடைய அனுபவங்களையும் இதுல சேர்த்துக்க முடிஞ்சது. ஸ்டாண்ட்-அப் காமெடியனாக நினைக்கும் ஒருவனைப் பற்றிய கதைதான் இந்தப் படம்." என்றார்.
"எப்போதுமே ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஒவ்வொரு விதமான எனர்ஜி இருக்கும். ஒவ்வொரு டைரக்டர்கிட்ட இருந்தும் நம்ம நிறைய விஷயங்களைக் கத்துக்குவோம். இதுவரைக்கும் எனக்குப் படங்கள்ல தீவிர நடிப்பை வெளிப்படுத்துற மாதிரியான கேரக்டர்கள் அமையல.
என்னுடைய காணொளிகள்ல பண்ற காமெடி மாதிரிதான் அதையும் செய்திருக்கேன். இந்தப் படத்துல என்னுடைய நடிப்பை வெளிப்படுத்துறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு.
காமெடியோடு இந்தப் படத்துல சென்டிமென்ட் மாதிரியான விஷயங்களும் நிறைஞ்சிருக்கு. "இந்தப் படத்துக்காக இவரிடம் இவர் மாற்றிக்கொண்ட விஷயங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டவர், "ஒரு பெண் பாடிபில்டர்தான் இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்.
விக்ரம்
எனக்கும் அவங்களுக்குமான வித்தியாசங்கள்தான் இந்தப் படம். அதனால என் பிட்னஸ் பற்றி டைரக்டர் எதுவும் சொல்லல. ஆனா, வழக்கமான டயட்டை ஃபாலோ பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.
உடல் மெருகேற்றிச் செய்கிற மாதிரியான கதாபாத்திரம் இதுல எனக்குக் கிடையாது. எங்களுடைய வீடியோக்களுக்கு அத்தனை வேலைகளும் நாங்கதான் பார்த்துப்போம்.
அந்த மாதிரிதான் இந்தப் படத்துக்கும் ஆர்வத்தோடும் ஆசையோடும் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். இப்போ வரைக்கும் அத்தனை வேலைகளும் சிறப்பாகவே முடிஞ்சிருக்கு, பார்ப்போம்ங்க!" என்றார்.