தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதில், தி.மு.க. தலைமையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் குறிவைத்து, அதிகார ஆணவம், ஊழல் பணப்பரிவர்த்தனை மற்றும் வாக்காளர்களை பணம், பரிசுகள் மூலம் பாதிக்க முயற்சி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சி மாவட்டம் வாழைக்காடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விநியோகத்தில் முறைகேடு ஏற்பட்டதாக எதிர்ப்பு தெரிவித்த 25 வயதான சிந்துஜா என்ற இளம்பெண் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் உயிரிழந்ததாகவும், அந்த மரணம் சாதாரண தற்கொலை அல்ல; அழுத்தங்களால் ஏற்பட்ட துயர முடிவாகும் எனவும் பதிவு கூறுகிறது.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெண்களிடையே அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தல் காலத்தில் காவலர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில் உண்மை வெளிவந்திருக்காது எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறி, வாக்காளர்களை கவரும் நோக்கில் பெருமளவில் பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவில், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கி, தற்போதைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற நம்பிக்கையும் பதிவு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.