விஜயை தப்பா எடை போடாதீங்க…! “யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காது”.. தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை… புது குண்டை தூக்கிப்போட்ட மு.க அழகிரி மகள்… திமுகவுக்கு எச்சரிக்கை…!!!
SeithiSolai Tamil April 16, 2026 10:48 PM

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரிக்கும் வாக்குகள், தி.மு.க.வின் வெற்றியைத் தவிடுபொடியாக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், கயல்விழி அழகிரி அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் களம் குறித்து கயல்விழி கூறியதாவது, நான் தி.மு.க.வுக்கு எதிராகப் பேசவில்லை. கூட்டணி பலம் மற்றும் பெரிய அளவிலான எதிர்ப்பு இல்லாதது போன்ற காரணங்களால் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றே தோன்றியது. ஆனால், விஜய் களத்திற்கு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தேர்தல் களத்தில் விஜய் மிகத் தீவிரமாகச் செயல்படுகிறார். அவர் நிச்சயம் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார். ஆனால் தி.மு.க. அவரை மிகக் குறைவாக எடைபோடுகிறது. அவர் பிரிக்கும் வாக்குகள் தி.மு.க.வின் வெற்றிக் கனவைத் தவிடுபொடியாக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் வருகையாலோ அல்லது வாக்குகள் பிரிவதாலோ யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ அமையும் சூழல் கூட ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில், எனது தந்தை (மு.க. அழகிரி) மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை அனுசரித்து, அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற மு.க.ஸ்டாலின் முயல வேண்டும். அதைச் செய்யாமல் சர்வாதிகாரமாகச் செயல்படுவது தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்கும். இதே ஆதங்கம் கட்சியின் பல மூத்த நிர்வாகிகளிடமும் மறைமுகமாக இருந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அழகிரி குடும்பத்திலிருந்து எழுந்துள்ள இந்த விமர்சனம் தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.