எம்ஜிஆரை நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் ஆக்கியது அவர்களா? அட அவரே சொல்லிட்டாரே!
CineReporters Tamil April 17, 2026 11:48 AM

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழ்சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டதற்குப் பின்னால் பல திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார். ஒரு சில படங்களை இயக்கி இருக்கிறார். என்றாலும், தயாரிப்பாளர் என்று அவரது பெயர் முதல் முதலாக இடம்பெற்ற படம்னா நாம் என்ற படம்தான்.

எம்ஜிஆர், கலைஞர் மு.கருணாநிதி, இயக்குனர் காசிலிங்கம், பத்திரிகையாளர் ராஜாராம் நால்வரும் சேர்ந்து உருவாக்கியதுதான் மேகலா பிக்சர்ஸ் என்ற நிறுவனம். இது ஜூபிடர் பிக்சர்ஸோடு சேர்ந்து இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் நாம். இந்தப் படத்தின் துவக்க விழா நெப்டியூன் ஸ்டூடியோவில் நடைபெற்ற போது தான் அந்தப் படத்திலே தயாரிப்பாளராக இணைந்தது பற்றி உணர்ச்சிகரமாக உரையாற்றினார் எம்ஜிஆர்.

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என்னை கதாநாயகனாக்கிய நிறுவனம். அதைத் தொடர்ந்து மர்மயோகி என்ற படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். நடிக்க வாய்ப்பு கொடுத்தது மட்டும் இல்லாம அந்தப் படத்தில் ஊதியத்தையும் எனக்குக் கூடுதலாகக் கொடுத்தார்கள் என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு தமிழ் சினிமாவிலே எனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள நடிகனா இருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணம் ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளிகளான முகைதீனும், சோமசுந்தரமும்தான்.

நான் உங்களுக்கு ரொம்பவே நன்றி கடன் பட்டுருக்கேன். என்னைக் கதாநாயகனாக்கியதோடு மட்டும் நிற்காமல், ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திலே மாதச்சம்பளத்திற்குப் பணியாற்றிக் கொண்டு இருந்த என்னை இந்தக் கூட்டுத் தயாரிப்பிலே முதலாளியாகவும் அவர்கள் ஆக்கி இருக்கிறார்கள். முதலாளி, தொழிலாளின்னு எல்லாம் வித்தியாசம் பார்க்காம நடிகனும், தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று நினைச்சாங்களே. அந்த பெருந்தன்மையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை என்று அந்த விழாவிலே உணர்ச்சி பொங்க பேசி இருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.