Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில், உச்சகட்ட அரசியல் பரபரப்பில் தேர்தல் களம் உள்ளது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது, அதிமுக மற்றும் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
திமுகவை அகற்ற உருவான கூட்டணி:#கோவை மற்றும் #திருப்பூர் மாவட்டங்களில், நமது வெற்றியை இன்றே தங்கள் வரவேற்பால் உறுதிசெய்துவிட்ட பொதுமக்களிடம் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
1998-ல் நான் மக்களவை உறுப்பினராக இருந்த நேரத்தில், மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுச் சட்டமான… pic.twitter.com/FdDWiBQEbq
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu)
அந்தவகையில், பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக ஆட்சியை அரியணையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் தொகுதிக்கு திமுக எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் மட்டுமே இங்கு உள்ளன. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரே ஒரு பாலம் கூட பாதியிலேயே நிற்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
பெண்கள் இடஒதுக்கீடு – வரலாற்றுப் பின்னணி:நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 33% பெண்கள் இடஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், “பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. 1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தம்பிதுரை சட்ட அமைச்சராக இருந்து இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். அப்போது முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் அதைத் தடுத்தனர். ஜெயலலிதா அன்று கண்ட கனவை இன்று பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்” என்று பாராட்டினார்.
ஒரு கருப்புக் கொடி கூடத் தெரியவில்லை:தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக அவதூறு பரப்புவதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற இடங்கள் குறையும் என்று ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டச் சொன்னார். ஆனால், நான் வரும் வழியெங்கும் பார்த்தேன், ஒரு கருப்புக் கொடி கூட என் கண்ணுக்குத் தெரியவில்லை. ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என்பதற்கு இதுவே சாட்சி” என்றார்.
மேலும் படிக்க: அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!
சட்டமன்றத் தேர்தலா? டெல்லித் தேர்தலா?மேலும் முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்துகளைச் சாடிய அவர், “இப்போது நடப்பது தமிழக சட்டமன்றத் தேர்தல். ஆனால் முதலமைச்சரோ இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான போட்டி என்கிறார். மேட்டுப்பாளையம் மக்களுக்குத் தெரிந்த அடிப்படை விஷயம் கூட முதலமைச்சருக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு முதல்வர் நாட்டை ஆண்டால் நாடு உருப்படுமா?” என்று காட்டமாக வினவினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.