தவெக தலைவர் விஜய் மீது 3 வழக்குப்பதிவு.. விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு!
TV9 Tamil News April 17, 2026 11:48 AM

சென்னை, ஏப்ரல் 17 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Tamilaga Vettri Kazhagam Leader Vijay) மீது, தடைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 15, 2026 அன்று அவர் சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய  நகர், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய்

ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிடுகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஏப்ரல் 15, 2026 அன்று அவர் சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய நகர், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இதையும் படிங்க : கண்ணை குத்த வந்த முருகன் வேல்… நூலிழையில் தப்பிய விஜய்.. திகைத்து நின்ற கட்சியினர்.. என்ன நடந்தது!

தவெக தலைவர் விஜய் மீது மூன்று வழக்குப்பதிவு

தவெக தலைவர் விஜயை காண அவரது பிரசாரத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் அன்றைய தினம் விஜய் பிரசாரத்தை காண ஏராளமான மக்கள் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி சாலையில் ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக விஜய் மீது மாம்பலம், நுங்கம்பாக்கம், வேப்பேரி ஆகிய 3 காவல் நிலையங்களில் நேற்று (ஏப்ரல் 16, 2026) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Vellore Constituency Election 2026: திமுகவின் கோட்டையாக இருக்கும் வேலூர் சட்டமன்ற தொகுதி.. மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?

பறக்கும்படை அதிகாரி சந்தோஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் மீது மட்டுமன்றி, தியாகராய நகர் தொகுதி வேட்பாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.