பாஜக மகளிரை அரசியலுக்காக ஒரு கேடயமாக பயன்படுத்துவதாக கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய கனிமொழி, “நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துக் கொண்டிருக்கும்போது எதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசிதழில் வெளியிட்டப்பது?” என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், நான் 8 கோடி மக்களின் குரலாக பேசுகிறேன். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதிகளவில் கவனம் செலுத்தியது. அந்த மாநிலங்களால் சிறப்பாக மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு சிறு குடும்பங்கள் உருவாகியது. 2001 காலக்கட்டங்களில் தென் மாநிலங்களில் இருந்து வரக்கூடிய மக்களின் குரலை கேட்கும் மத்திய அரசு இருந்தது.
தொகுதி மறுவரையறை திட்டத்தை 25 ஆண்டுகள் ஒதுக்கி வைப்பதாக அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அறிவித்தார். இந்த சட்டத்தால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கப்பட்டால் பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது. தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1.6 சதவிகிதம் தான். அமெரிக்கா, பிரான்ஸை விட குறைவான பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கீட்டை கொண்டு நீங்கள் தொகுதி மறுவரையறை செய்வதாக சொன்னாலும் அது 15 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையாகும். ஆக, உண்மையில் மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். ஆனால் மத்திய அரசு தொகுதிகள் உயரும் என கூறுகிறது. பாஜக தனது சொந்த சதி திட்டத்தை நாட்டின் மீது சுமத்தவே இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி விருப்பம்போல தொகுதி மறுவரையறையை செய்து நாட்டின் அரசியல் சூழலை மாற்ற நினைக்கிறது. தொகுதிகள் எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்த்தப்படும் என கூறும் அமித்ஷா அதனை செயல்படுத்த முடியுமா?, தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவை நீங்கள் செல்லாதது ஆக்குவீர்களா?
ஒருவேளை தொகுதி மறுவரையறை மசோதா சிறப்பானது என்றால் ஏன் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை பெறவில்லை?, மகளிர் உரிமைக்காக பாஜக குரல் கொடுக்கிறது என்றால் நாங்கள் நம்ப வேண்டுமா?, மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு அரசியல் பொறி. மகளிரை பாஜக அரசியலுக்காக ஒரு மனித கேடயமாக பயன்படுத்துகிறது. தற்போதுள்ள 543 உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தொகுதிகளை 850 ஆக உயர்த்தினால் தெற்கில் இருந்து ஒரு வாக்கு கூட பெறாமல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வர முடியும்” என அவர் தெரிவித்தார்.