USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
குலசேகரன் முனிரத்தினம் April 18, 2026 09:14 AM

USA Iran War: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக சென்றுகொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் கருத்தை மறுத்த ஈரான்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எங்களிடம் ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருந்தார். இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள தெஹ்ரான், அதனை எந்த ஒரு இடத்திற்கும் மாற்றப்போவதில்லை என, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகேய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு வழங்குவது எனும் விவகாரமே பேச்சுவார்த்தையில் இடம்பெறவில்லை” என தேரிவித்துள்ளார். 

ட்ரம்ப் சொன்னது என்ன?

முன்னதாக தனது சமூக வலைதள கணக்கில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவை வந்தடைய உள்ளது. அது B2 பாம்பர்களால் உருவாக்கப்பட்டது.” என குறிப்பிட்டு இருந்தார். அதாவது முந்தையை அமெரிக்க தாக்குதல்களால் மண்ணில் புதைந்த ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட உள்ளது என பதிவிட்டு இருந்தார்.ஆனால், அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையானது மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் குறித்து மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், யுரேனியத்தை மீட்டு எடுப்பது பற்றியது இல்லை எனவும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. 

எது முக்கியம்? - ஈரான் விளக்கம்

பேச்சுவார்த்தை தொடர்பாக பேசிய இஸ்மாயில், “அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை விரிவானதகாவும், பல்வேறு விவகாரங்களை கையாளும் விதமாகவும் இருந்தது. பொருளாதார தடைகளை நீக்குவது நாங்கள் வழங்கிய 10 கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது.  எங்கள் மீது திணிக்கப்பட்ட போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான உதவியை வழங்குவது மற்றொரு முக்கியமான அம்சம்” என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விட்டுக்கொடுத்தால், முடக்கிவைக்கப்பட்டுள்ள 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை விடுவிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாம்.

அமெரிக்காவிற்கு வார்னிங்..

ஈரான் ஹார்மஸ் நீர்வழிப்பாதையை முற்றிலுமாக வணிக பயன்பாட்டிற்கான திறந்தாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில், அவர்களது வணிக கப்பல்கள் அந்த வழியாக செல்வதை தொடர்ந்து முடக்குவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானிய துறைமுகங்களை முடக்கும் பணிகளை அமெரிக்கா தொடர்ந்தால், ஹார்மஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் மூடுவோம் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார். அந்த வழியான கப்பல்களின் போக்குவரத்தானது ஈரானின் அங்கீகாரத்துடனேயே நடைபெறும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் மோதலால் 500 மில்லியன் கச்சா எண்ணெய் பாரெல்கள் சர்வதேச சந்தையில் இருந்து துடைத்து எறியப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நவீன வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய் விநியோக பாதிப்பு என இதனை ஆய்வாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.