கர்நாடகாவில் பயங்கரம்... கார், பஸ் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உடல் கருகிப் பலி!
Dinamaalai April 19, 2026 01:48 AM

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், கார் மற்றும் தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், பேருந்து மீது மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிர்வார் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) என்பவர், தனது குடும்பத்தினருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலுக்குத் தரிசனம் செய்யச் சென்றுள்ளார். தரிசனம் முடிந்து மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷாந்தாப்பூர் அருகே பெங்களூருவிலிருந்து குல்பர்கா நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய சில நிமிடங்களிலேயே இரு வாகனங்களும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், காரில் இருந்தவர்களால் வெளியே வர முடியாமல் போனது.

இந்த விபத்தில் கிருஷ்ணா நாயக், அவரது மனைவி ஆனந்த கலா மற்றும் மகன் சரணப்பா உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பலியானார்கள். படுகாயமடைந்த சரணப்பாவின் மனைவி நிசர்கா மற்றும் அவர்களது பச்சிளம் குழந்தைகள் சித்தார்த், சசிகலா ஆகிய மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தனர். பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஒரு குடும்பமே மொத்தமாக விபத்தில் பலியான சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.