மணிப்பூரில் மீண்டும் பதற்றம்... துப்பாக்கிச் சூட்டில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி!
Dinamaalai April 19, 2026 01:48 AM

மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் இனமோதல்கள் ஓய்ந்தபாடில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று இம்பால்-உக்ருல் சாலையில் நடந்த கொடூரத் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் நடத்திய இந்தத் திடீர் மறைந்திருந்துத் தாக்குதலில், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர் உட்பட இரண்டு பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மலைப்பகுதியில் மீண்டும் போர் மேகங்களைச் சூழ வைத்துள்ளது.

உக்ருல் பகுதியைச் சேர்ந்த எஸ். டபிள்யூ. சினோஷாங் ஷோக்வுங்னாவ் (45) மற்றும் யருயிங்கம் வாஷும் (42) ஆகிய இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர். இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் இருவரும் டாங்குல் நாகா இனத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் குகி ஸோ கவுன்சில் கடும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், டாங்குல் நாகா அமைப்பு இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே நிலவி வரும் மோதலால் மணிப்பூர் ரத்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களாக அமைதி நிலவி வந்த சூழலில், தற்போது மீண்டும் அரங்கேறியுள்ள இந்தத் தாக்குதல் அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை விதைத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.