தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கு என்பது வெறும் 0.5 விழுக்காடு கூட கிடையாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் தயவால் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வளவு பலவீனமான ஒரு கட்சித் தலைமையிடம் தன்மானத்தைத் தாரை வார்த்துவிட்டு, திமுக உடன்பிறப்புகள் ஏன் இன்னும் அந்தக் கூட்டணியில் நீடிக்கிறார்கள் என அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.
”தமிழர் என்ற உணர்வு இல்லாதவனைப் பெற்றோர் மேல் ஐயம், அவன் பிறப்பின் மேல் ஐயம்” என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வரிகளை மேற்கோள் காட்டிய சீமான், தன்மானமின்றி கை சின்னத்திற்கு வாக்கு கேட்பவர்களின் டிஎன்ஏ (DNA) சோதிக்கப்பட வேண்டும் என ஆவேசமாக முழங்கினார். இவ்வளவு அவமானங்களைச் சந்தித்த பிறகும் காங்கிரஸ் பின்னால் செல்வது வேதனையாக இருப்பதாகவும், தமிழர்கள் தங்கள் தன்மானத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.