அசத்தல்... அதிக வாக்காளர்கள் வசிக்கும் 5 அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே வாக்குச்சாவடி - மாநகராட்சி அறிவிப்பு!
Dinamaalai April 19, 2026 11:48 AM

தமிழக சட்டமன்றத் தேர்தல்-2026 நெருங்கி வரும் நிலையில், சென்னையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. வெயிலில் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், வாக்காளர்களுக்கு வசதி ஏற்படுத்தித் தரவும் சென்னையில் உள்ள 5 பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே இந்த முறை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிக வாக்காளர்கள் வசிக்கும் கீழ்க்கண்ட 5 இடங்களைத் தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் தண்டையார்பேட்டை இளையா தெருவில் உள்ள 'பிரின்ஸ் வில்லேஜ்' (Prince Village) - அடுக்குமாடி குடியிருப்பு 1. அதே வளாகத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 2-லும் மற்றொரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.

விருகம்பாக்கம் தொகுதியில் கோயம்பேடு 'சவுத் ஏசியன் கேம்ஸ் கோஆர்டினேட்' (South Asian Games Co-ordinate Quarters) குடியிருப்பில் 2 வாக்குச்சாவடிகள். வேளச்சேரி தொகுதியில் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள 'சிடிஎஸ் ரீகல் பாம் கார்டன்' (CDS Regal Palm Garden) அடுக்குமாடி குடியிருப்பு.

வாக்காளர்களை உற்சாகப்படுத்த நேற்று இந்தக் குடியிருப்புகளில் 'மாதிரி வாக்குச்சாவடி' மையங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், குடியிருப்பு வாசிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வுப் பேரணிகளும் நடத்தப்பட்டு "100 சதவீதம் வாக்களிப்போம்" என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல அலுவலர்கள் ராஜ்குமார், வரதராஜன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குடியிருப்புகளுக்குள்ளேயே வாக்குச்சாவடி வருவதால், இந்த முறை சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.