SRH Vs CSK: "எதிரணியினர் 220 அல்லது 230 ரன்கள் வரை எடுப்பார்கள் என நினைத்தோம், ஆனால்.!"- ருத்துராஜ்
Vikatan April 19, 2026 11:48 AM

ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல்.18) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியும், 7-வது இடத்தில் சென்னை அணியும் உள்ளன.

SRH vs CSK

இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ருத்துராஜ், "எதிரணியினர் 220 அல்லது 230 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று நினைத்தோம்.

ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்தி 30 ரன்கள் வரை குறைத்தது எங்களின் சிறந்த பந்துவீச்சுத்தான். 10 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

அங்கிருந்து ஒரு சில சிறப்பான பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி, எதிரணியை அழுத்தத்தில் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம். ஆனால், அதற்குப் பிறகு வந்த இரண்டு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றிவிட்டன.

10-வது ஓவருக்குப் பிறகு அடுத்த 2 ஓவர்களில் நாங்கள் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அது அவர்களுக்குப் பெரிய உதவியாக அமைந்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் ஓவருக்கு 12 அல்லது 13 ரன்கள் எடுப்பது கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். எதிரணி பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள், அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

கடந்த மூன்று போட்டிகளாகவே எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அன்ஷுல் கம்போஜ்

அன்ஷுல் கம்போஜ் கடைசி ஓவர்களில் பந்து வீசுவதற்காக மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார்.

'என்னிடம் தெளிவான திட்டம் இருக்கிறது, நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்' என்று கேப்டனிடம் உறுதியாகக் கூறும் பந்துவீச்சாளர்கள் கிடைப்பது அபூர்வம்.

அப்படிப்பட்ட ஒரு வீரர் எங்கள் அணியில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்னது போல, அவர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார், நாளுக்கு நாள் முன்னேறி வருகிறார்" கேப்டன் பேசியிருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.