உஷார்... ஏமாறாதீங்க மக்களே... ஹோட்டல் பில்லில் 'சர்வீஸ் சார்ஜ்' கட்டாயமா?!
Dinamaalai April 19, 2026 01:48 PM

வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான விஷயம். ஆனால், சாப்பிட்டு முடித்து பில் வரும்போது அதில் உணவின் விலையைத் தவிர பல கூடுதல் கட்டணங்கள் இருப்பதைப் பார்த்து நாம் மிரண்டு போகிறோம். இதில் எதைச் செலுத்த வேண்டும், எதைத் தவிர்க்கலாம் என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:

உணவகங்களில் உணவின் விலையுடன் விதிக்கப்படும் 5% ஜிஎஸ்டி வரி நேரடியாக அரசுக்குச் செல்லும் வரி என்பதால், இதை நாம் கண்டிப்பாகச் செலுத்தித்தான் ஆக வேண்டும். இதில் நமக்குப் விலக்குக் கோர உரிமை இல்லை.

ஆனால், பல ஹோட்டல்கள் 'சர்வீஸ் சார்ஜ்' என்ற பெயரில் 5% முதல் 10% வரை கூடுதல் கட்டணத்தைப் பில்லில் சேர்க்கின்றன. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின்  விதிகளின்படி, இந்த சர்வீஸ் சார்ஜ் சட்டப்படி கட்டாயமானது அல்ல. வாடிக்கையாளரின் அனுமதியின்றி ஹோட்டல் நிர்வாகம் தானாகவே இந்தப் பணத்தைப் பில்லில் சேர்க்கக் கூடாது.

உணவகத்தின் சேவை உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நீங்கள் விரும்பும் தொகையைத் தரலாம். அதை வற்புறுத்தி வசூலிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஒருவேளை ஹோட்டல் நிர்வாகம் சர்வீஸ் சார்ஜ் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால் அல்லது பில்லில் இருந்து அதை நீக்க மறுத்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக நுகர்வோர் உதவி மையத்தின் 1915 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

இனி ஹோட்டலுக்குச் சென்றால் பில்லை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க மறக்காதீர்கள். உங்கள் உரிமையை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.