சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனில் அமைந்துள்ள கீழடி, தொன்மை நாகரிகத்தின் மறைந்த கதைகளை வெளிக்கொணரும் முக்கிய அகழாய்வு மையமாக திகழ்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முன்னெடுத்த 10 கட்ட அகழாய்வு பணிகளில், சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான மனித வாழ்வியல் சான்றுகள் பல வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு, அவை கீழடி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரலாற்று செல்வத்தை காண தினமும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் பெருமளவில் வந்து ரசித்து, நினைவுச்சின்னங்களாக புகைப்படங்களை பதிவு செய்து செல்கின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்ற தளத்திலேயே உருவாக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகம், பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய மையமாக மாறியுள்ளது.
தற்போது 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு, திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே புதிதாக தோண்டப்பட்ட குழிகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் தலைமையில், தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்திய அகழாய்வில் மிகச் சிறிய அளவிலும், தனித்துவமான குறுகிய வாய்க்கொண்ட சுடுமண் பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டு, ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முன்பு கீழடியில் இதுபோன்ற வடிவமைப்புடைய பானை எதுவும் கண்டறியப்படாததால், இது புதிய கலாச்சார அம்சத்தை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக கருதப்படுகின்றது.
முன்னதாக கண்டெடுக்கப்பட்ட கெண்டி மூக்கு பானை, சிவப்பு நிற அலங்கார முடிச்சுகளுடன் கூடிய பானைகள் போன்றவற்றிலிருந்து மாறுபட்ட இந்த புதிய வடிவம், கீழடி நாகரிகத்தின் தொழில்நுட்ப திறனையும், கைவினை நயத்தையும் மேலும் வலியுறுத்துவதாக தொல்லியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.