Kara: "மம்மூட்டி சார் எனக்கு கதை இருக்கான்னு கேட்டார்!" - 'கர' இயக்குநர் விக்னேஷ் ராஜா
Vikatan April 19, 2026 11:48 PM

'போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'கர' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் ரிலீஸை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் ராஜாவை சினிமா விகடன் யூடியூப் சேனலுக்குப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசிய அவர், "தயாரிப்பாளர் தேனப்பன் சார் மம்மூட்டி சாரை மீட் பண்ணியிருக்கார். அப்போ மம்மூட்டி சார், 'போர் தொழில் படம் பார்த்தேன். நல்லா இருந்தது.

விக்னேஷ் ராஜாகிட்ட எனக்கு எதாவது கதை இருந்தா சொல்லச் சொல்லுங்க'ன்னு தேனப்பன் சார்கிட்ட சொல்லியிருக்கார். இந்தத் தகவல் வந்தது. என்கிட்ட மம்மூட்டி சார் நேரடியாகப் பேசல. அவர் உச்ச நடிகர்.

என்னுடைய விருப்பமான நடிகர்களில் அவரும் ஒருவர். அவருக்கான கதை அமைஞ்சதுன்னா நான் அவர்கிட்ட போய் சொல்லுவேன்.

மம்முட்டி சாருக்கு தீனி போடுற அளவுக்கு ஒரு மேட்டர் என்கிட்ட மாட்டுச்சுன்னா கண்டிப்பா போவேன்." என்றவரிடம், "படத்தில் பல மலையாள நடிகர்கள் இருக்கிறார்களே.." எனக் கேட்டோம்.

தனுஷ் - 'கர' படத்தின் ஸ்டில்ஸ்

இதற்கு அவர், "என்னுடைய இயக்குநர்கள் குழுவிலேயே 'இத்தனை மலையாள நடிகர்களா'னு கேட்டாங்க. 'போர் தொழில்' திரைப்படத்திலும் எனக்கு அப்படி அமைஞ்சிடுச்சு.

சுராஜ் சாருக்கும், ஜெயராம் சாருக்கும் அந்த ஊர்த்தன்மை அவ்வளவாகத் தேவைப்படல. மமிதா பைஜூ கதாபாத்திரத்திற்குத்தான் அது தேவைப்பட்டுச்சு.

இந்தப் படத்துக்காகச் சுராஜ் சாரும், மலையாள தொனி கலந்திடாமல் டப்பிங் பண்ணினாரு. மமிதாவுக்கும் டப்பிங்ல அதே மாதிரியான விஷயம்தான் நடந்துச்சு" என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.